2026க்கு முன்பாகவே தேர்தல்? பொங்கலில் பிரச்சாரத்தை துவக்கும் அதிமுக! ரெடியாகும் ’தலை’..வெளியான தகவல்
மதுரை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் தேர்தலை எதிர்கொள்ள தற்போதே தயாராகி வருவதாக கூறுகின்றனர் அதிமுக நிர்வாகிகள், பொங்கலுக்கு பிறகு பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வருகிறது அதிமுக. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் எனவும், மாவட்ட செயலாளர்களை கண்காணித்து அவர்களது பணி திருப்தியாக இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமை சீட்டுகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்றடைந்ததா என்பது குறித்து கள ஆய்வு செய்து டிசம்பர் 7ஆம் தேதிக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும் என கள ஆய்வுக் குழுவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
அதிமுக தேர்தல் ஏற்பாடுகள்:
இக்குழுவில், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த 11ஆம் தேதி இக்குழு கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிலையில், அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
எடப்பாடி பழனிசாமி:
இந்த நிலையில் அந்தக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தற்போதிருந்தே தேர்தலுக்கு தயாராக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக ஜனவரி மாதத்தில் இருந்து அதாவது பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர். மேலும் மாவட்ட ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒன்றிய செயலாளர் மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வியூகம், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பிரச்சாரம்:
இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது எனவும், எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்க்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார் அதிமுகவைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா. இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"பொங்கலுக்கு பின்னர் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
முன்கூட்டியே தேர்தல்:
2026ஆம் ஆண்டுக்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. எப்போது தேர்தல் நடந்தாலும் அதிமுக தயாராக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பொங்கல் பரிசு தொகை 2500 ரூபாய் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பு உறுதியாக இருக்க வேண்டும். பல்கலை மாணவி விவகாரத்தில் யார் அந்த சார்.. குறித்தும் விரைவில் தகவல் வெளியாகும் என நம்புகிறோம்" என கூறுகின்றனர்.
எழுச்சி மிகு 2025:
இதேபோல் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,"2025 ஆம் ஆண்டு அதிமுகவிற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும். 2025ஆம் ஆண்டில் திமுக அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு விடியல் கிடைக்கும். தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அதிமுக முன்னெடுத்துச் செல்லும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதையும் ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார்" என்றார்.












Click it and Unblock the Notifications