இஸ்லாமியர்களுக்கு எதிராக மோசமான அவதூறு பதிவு.. ராமநாதபுரம் பாஜக நிர்வாகி அதிரடியாக கைது
மதுரை: இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறான முகநூல் பதிவுகளை வெளியிடுவதாக எழுந்த புகாரில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த பாஜக மாநில பொறுப்பில் உள்ள குருஜி என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த 47 வயதாகும் அகமத் பயாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அண்மையில் தாக்கல் செய்த மனுவில், "ராமநாதபுரம் மாவட்டம் நம்புதலையைச் சேர்ந்த 35 வயதாகும் குருஜி என்பவர் பாஜக மாநில பொறுப்பில் இருக்கிறார். தொண்டி பகுதியில் இந்து, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்களாக பழகி வருகிறோம். ஆனால் அவர்களுக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக குருஜி பேஸ்புக் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இஸ்லாமிய மத போதகர்கள், தர்கா, ஹஜ்ரத் போன்றவை குறித்து மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களை குருஜி முன்வைத்து வருகிறார். அரசியல் காழ்ப்புணர்வுடன் வரலாறுகளை சித்தரித்து, கேவலமான பதிவுகளை குருஜி பேஸ்புக்கில் பதிவு செய்து வருகிறார். இது இஸ்லாமியர்களை மிகவும் புண்படுத்தியதுடன், காயப்படுத்தியுள்ளது. தொண்டியைச் சேர்ந்த குருஜி தொடர்ந்து மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வருகிறார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இஸ்லாமியர்களுக்கு எதிராக கீழ் தரமற்ற பேஸ்புக் பதிவுகளை வெளியிட்ட வரும் பாஜக நிர்வாகி குருஜி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், " மனுதாரரின் புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், "புகார் அளித்து பல மாதங்கள் கடந்துள்ளது. இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. குருஜி அவரது முகநூலில் இந்து - முஸ்லிம் மக்களுக்கிடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார் என்றார்.
இதையடுத்து மதுரைக்கிளை உயர்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி, ''எவ்வாறு இதுபோன்ற பதிவுகள் பதிவிடப்படுகிறது. மோசமான, பார்க்கவே சகிக்க முடியாத பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய இவ்வளவு தாமதம் ஏன்? இது போன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் போலீஸோர் அதற்கு நேர்மாறாக குண்டர் சட்டங்களை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, இந்த வழக்கை வேறு விசாரணை பிரிவுக்கு ஏன் மாற்றக்கூடாது?
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்று மத மோதல்களை உருவாக்கும் நபர்களை விசாரணை செய்ய வேறு ஏதேனும் பிரிவு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணையை ஒத்திவைத்தார். இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வந்த தொண்டி போலீசார் குருஜியை கடந்த ஒரு வாரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குருஜியை நேற்று காலை காரைக்காலில் வைத்து கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை சேர்ந்தவரான குருஜி, பாஜக ஆன்மிக பிரிவு மாநில பொறுப்பாளர் ஆக இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications