கையில் செல்போன் இருந்தால் சமூக வலைத்தளங்களில் கண்டபடி பதிவு செய்யலாமா? ஹைகோர்ட் கிளை நீதிபதி காட்டம்
மதுரை: கையில் ஒரு செல்போன் இருந்தால் சமூக வலைத்தளங்களில் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா என மதுரை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் பெருகிவிட்டது. செல்போன் இல்லாதவர்களே பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அனைவரது கையிலும் ஆறாம் விரலை போல ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. ஸ்மார்ட் போன்கள் மூலம் உலகின் எந்த மூலையிலும் உள்ள நபர்களை அடுத்த நொடியே தொடர்பு கொள்ள முடியும் என்பதோடு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முன் பின் தெரியாதவர்களிடம் கூட ஸ்மார்ட் போன்கள் மூலமாக அறிமுகம் கிடைக்கிறது. இதேபோல் நம் செல்போன்களில் எடுக்கும் வீடியோவையும் பலரும் பார்க்கும் படி பதிவிட முடியும். யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக எல்லாரும் பார்க்கும் படி வீடியோவை பதிவிட முடியும். இதேபோல் மற்றவர்கள் போடும் வீடியோக்களுக்கும் நாம் கருத்துக்களை பதிவிட முடியும்.
இதனை ஒருசிலர் தவறான வழிகளிலும் பயன்படுத்துகின்றனர். அரசியல் தலைவர்களை பற்றி அவதூறாக பேசுவதையும், அவதூறான கருத்துக்களை பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தான் இப்படி அமைச்சர்கள், தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டவர் மீதான் வழக்கை விசாரித்த, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி, "கையில் ஒரு செல்போன் இருந்தால் சமூக வலைத்தளங்களில் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஜில் ஜோன்ஸ் என்பவர் மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. இதற்கு ஜாமீன் கோரி விஜில் ஜோன்ஸ் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி விஜில் ஜோன்ஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் நீதிபதி தண்டபானி கூறியதாவது:- கையில் ஒரு செல்போன் இருந்தால் சமூக வலைத்தளங்களில் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா?.. சமூக வலைத்தளங்கள் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துவிட்டு பின்னர் இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன் என்று பதிவிடுவதை எவ்வாறு ஏற்க முடியும். எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் போன்றோர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறேன். என்று கூறினார். தொடர்ந்து அவதூறு கருத்து பதிவிட்டவரை கைது செய்ய சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications