தெய்வமே என வேண்டிக் கேட்டேன்.. சில நிமிடங்களில் அற்புதம் நடந்தது.. உணர்ச்சிபெருக்கில் எடப்பாடி!
ஜெ. கோயிலில் வேண்டிய சில நிமிடங்களில் அற்புதம் நடந்ததாக இபிஎஸ் பேசியுள்ளார்.
மதுரை: ஜெயலலிதாவுக்கு கட்டிய கோயிலில் நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்று வேண்டிய சில நிமிடங்களில், அற்புதம் நிகழ்ந்ததாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உணர்ச்சி பெருக்குடன் பேசியுள்ளார். எம்ஜிஆர் - ஜெயலலிதா இருவரும் தெய்வ சக்தி மிக்க தலைவர்கள் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதீத உணர்ச்சிப் பெருக்குடன் இருந்தது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. மேலும் பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் கூறியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிமுக தொண்டர்கள் உற்சாகம்
இதன் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளதாக அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் திருமங்கலத்தில் நடைபெற்ற ஆர்பி உதயகுமார் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின், திருமண விழாவின் உற்சாகம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றது.

ஜெ. கோயிலில் எடப்பாடி பழனிசாமி
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு என்று அறிந்ததில் இருந்து தூக்கமே இல்லை. இன்று மதுரைக்கு புறப்பட்ட போது கூட, தீர்ப்பு எப்படி இருக்கும் என்ற ஐயப்பாடோடு தான் பயணித்தேன். என் உதட்டில் சிரிப்பு இருந்தாலும், என் உள்ளத்தில் சிரிப்பில்லை. ஏனென்றால் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இங்கு வந்துகொண்டிருந்த போது, ஆர்பி உதயகுமார் என்னிடம் வந்து, திருமண மேடையில் ஏறுவதற்கு முன் ஜெயலலிதா - எம்ஜிஆர் கோயிலுக்கு சென்று மாலை அணிவித்துவிட்டு வரலாம் என்று கூறினார்.

சில நிமிடங்கள் நடந்த அற்புதம்
என்னுடன் வந்த செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோரும் அதையே கூறினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஜெயலலிதா கோயிலுக்கு சென்றேன். அங்கு நான், இன்று அற்புதமான நாள். 51 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. உங்கள் ஆசியுடன் நடக்கும் திருமண நாளில், நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று வேண்டினேன். இந்த கோயில் தெய்வ பக்தியோடு இருக்கிற கோயில். இருபெரும் தலைவர்களும் எங்களுக்கு அருள் கொடுத்தார்கள். அவர்கள் அருள் கொடுத்த சில நிமிடங்களிலேயே, அற்புதமான செய்தி வந்தது.

சக்திமிக்க தலைவர்கள்
சக்திமிக்க தலைவர்கள் இருவரும் தெய்வங்களாக கொடுத்த வரப்பிரசாதம். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நாங்கள் இருவரும் உங்களுடன் இருக்கிறோம் என்று ஆசியுடன் தீர்ப்பு வந்துள்ளது. வேண்டிவிட்டு பக்கத்தில் இருக்கும் அறைக்கு சென்றபோதே, செய்தியை கூறிவிட்டார்கள். அவர்கள் தெய்வ சக்தி மிக்க தலைவர்கள் என்று தெரிவித்தார். இந்த உரையாற்றிய போது எடப்பாடி பழனிசாமி அதீத உணர்ச்சி பெருக்குடன் இருந்தார். அருகில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் கண் கலங்கி முகத்தில் சிரிப்புடன் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்டனர்.












Click it and Unblock the Notifications