'எவ்வளவு முடியுமோ..அதையும் தாண்டி கடுமையாக பணியாற்றி வருகிறார்..'தமிழக முதல்வருக்கு ஐகோர்ட் பாராட்டு
மதுரை: சாட்டை துரைமுருகன் தொடர்பான வழக்கில், தமிழக முதல்வர் எவ்வளவு பணிபுரிய முடியுமோ அதையும் தாண்டி பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட நீதிபதி புகழேந்தி, இதைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை மைக் கிடைத்தது என்பதற்காக முதல்வரை அவதூறாகப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களைப் பேசியும் சாட்டை துரைமுருகன் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டார்.
இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனச் சாட்டை துரைமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணை செய்தும் செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

தமிழக அரசு மேல்முறையீடு
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதல்வர் குறித்து அவதூறு பேசி வருகிறார் என்றும் இதன்பேரில் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது..

நீதிபதிகள் கோபம்
விசாரணையின் போது அரசு தரப்பில் சாட்டை துரைமுருகன் என்பவர் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும் உறுதிமொழிப் பத்திரத்தையும் மீறி அவதூறாகப் பேசி வருகிறார் என்றும் அதற்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனைப் பார்த்த கடும் கோபமடைந்த நீதிபதி புகழேந்தி, நீதிமன்றத்திற்கு வழங்கும் உறுதிமொழி பத்திரத்தை வெறும் பேப்பர் தானே என்று நினைக்கிறீர்களா என அதிருப்தியைப் பதிவு செய்தார்.

முதல்வருக்குப் பாராட்டு
மேலும் அவர் கூறுகையில், "தமிழக முதல்வர் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாக தற்போது பணியாற்றி வருகிறார். இதற்காக நீங்கள் ஒன்றும் பாராட்ட வேண்டாம். ஆனால் மைக் கிடைத்தது என்பதற்காகக் கண்டதை எல்லாம் பேச முடியாது. அவள் பேசியதெல்லாம் உட்கார்ந்து கேட்பதற்கு நீதிமன்றத்திற்கு நேரம் கிடையாது. அரசு தரப்பில் அவர் என்ன பேசி உள்ளார் என்பதை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யுங்கள்" என உத்தரவிட்டார்.

ஜாமீன் ரத்து செய்யப்படும்
அரசு மீது என்ன குற்றம் கண்டு விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி புகழேந்தி, சாட்டை துரைமுருகன் ஒரு வார்த்தை தேவையில்லாமல் அவதூறாகப் பேசி இருந்தால் கூட நிச்சயமாக அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார், இதையடுத்து வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications