மதுரையில் ஏலத்துக்கு வந்த வீடு.. தேன் மாதிரி பேசிய பெண்.. வில்லங்கம் இப்படிகூட வரும்.. ரூ.12 லட்சம்?
மதுரை: எப்போதுமே ஏலத்துக்கு வரும் வீட்டை வாங்கும்போது, கவனமாக இருக்க வேண்டும் என்று அலர்ட் செய்யப்பட்டே வருகிறது.. அப்படியிருந்தும் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றும் போக்கு நடந்து வருகிறது. இதோ மதுரையிலும் ஒரு மோசடி நடந்துள்ளது..
பொதுவாக, சந்தை மதிப்பைவிட, ஏலத்துக்குவரும் வீட்டின் விலை 20 முதல் 30 சதவீதம் குறைவாக இருக்கும் என்றாலும், ஏலத்துக்கு வரும் வீட்டை வாங்க சிலருக்கு தயக்கம் இருக்கலாம். இதில், வங்கிகள் மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் பெரும்பாலானவை எந்தவித வில்லங்கமும் இல்லாமல் இருக்கும் என்பார்கள்.

ஏல வீட்டை வாங்கும்போது கவனிக்க வேண்டியது
அதேசமயம், வரி செலுத்தாமல் இருப்பது, நில உரிமையில் சிக்கல் போன்ற காரணங்களால், சில சொத்துகளில் சிக்கலும் இருக்கும். எனவே ஒரு சொத்து அல்லது வீட்டை ஏலத்தில் எடுக்கும் முன்பாக, அதனை பற்றிய முழுமையான பின்னணி தகவல்களை அறிந்து கொண்டுதான், அதனை வாங்க முற்பட வேண்டும்.
முக்கியமாக, அந்த சொத்தில் வில்லங்கம் ஏதாவது உள்ளதா? அந்த வீடு அல்லது சொத்து அமைந்துள்ள இடம், வாங்குபவருக்கு ஏற்றதாக உள்ளதா? சந்தை மதிப்பைவிட, ஏலத்துக்கு வரும் சொத்தின் மதிப்பு எவ்வளவு குறைவு? என்றெல்லாம் ஆராய வேண்டும்.
விலை குறைவாக உள்ளது என்பதை மட்டுமே பார்க்கக்கூடாது.. சில வீடுகளின் கடன் மதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், அவற்றை வாங்குவது பெரிதாக பலன்தராது.. எனவே, ஏலத்துக்குவரும் சொத்துகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள், அந்த சொத்தின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
ஆசைவார்த்தையில் மயங்கிய சாந்தி
இப்படியிருக்கும்போது, மதுரையில் வீட்டினை ஏலம் விற்றது தொடர்பாக ஒரு தம்பதி செய்த மோசடி, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. மதுரை மாட்டுத்தாவணி அருகிலுள்ள டிஎம். நகரைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும், ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தாமரைக் கண்ணன் - தமிழ்ச்செல்வி என்ற தம்பதியினர் அறிமுகமாகியிருக்கிறார்கள்.
ஒருநாள் தமிழ்ச்செல்வி சாந்தியிடம், "என்னுடைய கணவர் வங்கியின் மூலம் ஏலம் விடும் வீடுகளை வாங்கி விற்கிறார். அவரது முயற்சியில் வீட்டு ஒன்றை உனக்கு வாங்கி தருகிறேன்" என்று கூறியிருக்கிறார். தமிழ்ச்செல்வியின் ஆசைவார்த்தையில் சாந்தியும் மயங்கினார்.. இதையடுத்து, அய்யர்பங்களா மகாலட்சுமி நகரிலுள்ள வீடு ஒன்றை சாந்திக்கு காண்பித்தனர்.. அந்த வீடு சாந்திக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அட்வான்ஸ் பணம் எங்கே
இதையடுத்து, அந்த வீட்டை ரூ.27 லட்சம் விலை பேசப்பட்டது.. ஆனால், அட்வான்ஸாக ரூ.12.50 லட்சம் வங்கியில் செலுத்தினால் தான் வீட்டை வாங்க முடியும் என்று தம்பதியினர் சொல்லி உள்ளனர்.
உடனே சாந்தியும், எங்கெங்கோ அலைந்து திரிந்து பல்வேறு வகையில் ரூ.12.50 லட்சத்தை ஏற்பாடு செய்தார். கடந்த 2021 மார்ச்சில் செந்தாமரைக் கண்ணன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் அவர்களது வீட்டில் வைத்தே, இந்த அட்வான்ஸ் பணத்தையும் சாந்தி வழங்கினார். ஆனால், அதற்கு பிறகு, சாந்திக்கு அந்த வீட்டை, தம்பதியினர் வாங்கி கொடுக்க முயற்சிக்கவில்லை. பணத்தைத் திருப்பிக்கேட்டும் தரவில்லை.
கோர்ட்டுக்கு போன சாந்தி
தொடர்ந்து வீட்டுக்கு வந்து பணத்தை சாந்தி கேட்டதால், ஆத்திரமடைந்த தம்பதியினர், சாந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.. இதனால் மனம் நொந்துபோன சாந்தி, இது குறித்து காவல்துறையில் புகார் தந்துள்ளார்.. ஆனால், அந்த புகாரின்மீது போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால், வேறுவழியின்றி, சாந்தி நீதிமன்றத்தை அணுகினார்... இறுதியில், நீதிமன்ற உத்தரவின்பேரில் செந்தாமரைக் கண்ணன், தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது கரிமேடு போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications