ஆர்பி உதயகுமாரை எதிர்த்து திமுக தரப்பில் களமிறங்கும் மணிமாறன்? உதயநிதி நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்!
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக ஆர்பி உதயகுமாரும், திமுக சார்பாக மணிமாறனும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சியில் மணிமாறனுக்கு நல்ல மரியாதை அளிக்கப்பட்டிருந்த சூழலில், இம்முறை அமைச்சர் மூர்த்தியின் ஆதரவோடு திருமங்கலம் தொகுதியில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இரு கட்சிகளுமே மதுரை மாவட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தியது.

இதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் மட்டும் ஒவ்வொரு தொகுதியாக சென்று 4 நாட்கள் மக்களை சந்தித்தார். இதனால் மதுரை மாவட்டத்திற்கான முக்கியத்துவம் எகிறி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளுக்கான திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பாக இந்த 2 தொகுதிகளிலும் களமிறங்கும் வேட்பாளர்கள் கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது. திருமங்கலம் தொகுதியை பொறுத்தவரை இதுவரை திமுக 3 முறை மட்டுமே வென்றுள்ளது. எம்ஜிஆர் மறைவுக்கு பின் நடந்த தேர்தல், 1996 சட்டசபைத் தேர்தல் மற்றும் 2009 இடைத்தேர்தல் ஆகியவற்றில் திமுக வென்றிருக்கிறது.
மற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவே பெரும்பாலும் வென்றிருக்கிறது. அந்த வகையில் அதிமுக தரப்பில் ஆர்பி உதயகுமார் 3வது முறையாக வெல்வதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார். 2 முறை வென்ற தொகுதி என்பதோடு, அதிமுகவில் உயர் பொறுப்புகளை அள்ளிக் கொடுத்த தொகுதி என்பதால், ஆர்பி உதயகுமார் இந்த தொகுதியில் இருந்து மாறும் திட்டத்தில் இல்லை.
ஆனால் இம்முறை திமுக தரப்பில் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் களமிறங்க உள்ளதாக தெரிகிறது. கடந்த முறையும் ஆர்பி உதயகுமாரை எதிர்த்து போட்டியிட்ட மணிமாறன், சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால் இம்முறை அமைச்சர் மூர்த்தியின் ஆதரவுடன் மணிமாறன் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.
அண்மையில் திருமங்கலம் தொகுதிக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்திலும் மணிமாறனுக்கு நல்ல மரியாதை அளிக்கப்பட்டிருந்தது. முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகமுள்ள நிலையில், இம்முறை யார் வெல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு வேட்பாளர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, கடந்த முறை அமமுக சுமார் 13 ஆயிரம் வாக்குகளை பிரித்தது. இம்முறை விஜய் களத்தில் இருப்பதால், அவர் பிரிக்கப் போகும் வாக்குகள் தேர்தல் முடிவில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications