மாற்றம் இல்லை.. எங்களுடைய ஒரே கொள்கை எதிரி பாஜக தான்.. அரசியல் எதிரி திமுக தான்.. விஜய் ஆக்ரோஷம்
மதுரை: ‛‛எங்களுடைய ஒரே கொள்கை எதிரி பாஜகதான்.. ஒரே அரசியல் எதிரி திமுக தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. அண்டர் கிரவுண்ட்டில் ‛டீல்’ பேசி ஆதாயத்துக்காக கூட்டணி வைக்கும் கட்சி தமிழக வெற்றிக் கழகம் கிடையாது. யாரை பார்த்தும் பயம் கிடையாது. பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்து கொள்ள உலக மகா ஊழல் கட்சி நாங்கள் இல்லை'' என்று மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் ஏராளமான தொண்டர்கள் வருகை தந்தனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல லட்சம் தொண்டர்கள் காலை முதல் மதுரை மாநாட்டில் திடலில் குவிந்தனர். மாலை 3.30 மணியளவில் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையுரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கதை - திரைக்கதை - பாடல்
நம் மாநில உரிமைக்காக, மதசார்பின்மைக்காக உழைக்கிற குரல் இது. இந்த குரல் எப்போதும் ஓங்கி ஒழிக்குமே தவிர, நிற்கவே நிற்காது. இந்த குரலை ஒருபோதும் நிறுத்த முடியாது. இந்த படையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அரசியலுக்கு வருவதாக கூறியபோது அவர் வரவில்லை. இவர் வரவில்லை என்று சொன்னார்கள். பெயர் அறிவித்தபோது பெயர் மட்டும் தானே அறிவித்தார்கள் என்றார்கள்.
அதன்பிறகு முக்கியமாக மாநாடு.. மாநாடு எவ்வளவு பெரிய விஷயம்.. புஸ்ஸி ஆனந்தை வைத்து மாநாடு எப்படி நடத்த முடியும் என்றார்கள். மழை பெய்துவிடும்.மழை பெய்து எல்லாவற்றையும் கெடுத்துவிடும் என்றார்கள். ஆனால் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். இப்போது புதிதாக ஒன்றை சொல்கிறார்கள்.
ஆட்சியை பிடிக்கிறது எல்லாம் பெரிய விஷயம் இல்லையா.. இப்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இவர் சூட்டிங்கில்இருந்து வருவாராம்.. வந்ததும் ஆட்சியை பிடிப்பாராம். இவரால் எப்படி முடியும்.. அவராலேயே முடியவில்லை. இவராலே முடியவில்லை கூட்டம் எல்லாம் ஓகே தான். அது எல்லாம் எப்படி ஓட்டாக மாறும் என்கிறார்கள். இப்படி கதை, திரைக்கதை, இயக்கம், பாடல்கள் எழுதி கொண்டே செல்கிறார்கள்.
கோட்டைக்கு அனுப்பும் ரூட்
இந்த கூட்டம் வெறும் ஓட்டாக மட்டும் இல்லை. வரக்கூடிய தேர்தலில் ஊழல் ஆட்சியாளர்களுக்கு வைக்கப்போகும் வேட்டாக இருக்கும். கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டாக இருக்கும். கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் உணர்வாய், உறவாய் இருக்கிறோம்.
நம்முடைய கணக்கு எல்லாம் மக்களோடு மட்டும் தான். நாம் யாரு என்று அவங்களுக்கு தெரியும். அவங்க யாருனு நமக்கு தெரியும். நாமும் நம் மக்களும் எப்படி இருக்கிறோம் என்கிறோம் என்பது நமது எதிரிக்கு தெரியும். இருந்தாலும் விஜய் எதுக்கு வந்து இருக்கிறார் என்று புதிதாக நிறைய கேள்விகள் வருகிறது.
விளக்கம் தந்த விஜய்
அதற்கு விளக்கம் சொல்கிறேன் கேட்டு கொள்ளுங்கள்.. பெண்கள் குழந்தைகள், வயதானவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. இளைஞர்கள், உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என யாருக்கெல்லாம் அரசின் சிறப்பு கவனம் தேவையோ அதற்கான அரசை அமைப்பது தான் எங்களின் இலக்கு.
நான் ஏற்கனே சொன்னதை தான் இங்கு சொல்கிறேன். அரசியல் லாபத்துக்காக இந்த கட்சி தொடங்கப்படவில்லை. கொள்கை, கோட்பாடுகளுடன் தொடங்கப்பட்ட கட்சி. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய கொள்கை தலைவர்களின் வழிக்காட்டுதல்களோடு தொடங்கப்பட்ட கட்சி.
பாஜக - திமுக தான் எதிரிகள்
நம்ம கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். நம்முடைய ஒரே கொள்கை எதிரி பாஜகதான்.. ஒரே அரசியல் எதிரி திமுகதான்.. இதில் எந்த மாற்றமும் இல்லை. அண்டர் கிரவுண்ட்டில் டீல் பேசி ஆதாயத்துக்காக கூட்டணி வைக்கும் கட்சி தமிழக வெற்றிக் கழகம் கிடையாது. யாரை பார்த்தும் பயம் கிடையாது. மாபெரும் இளைஞர்கள் சக்தி, பெண்கள் சக்தி நம்முடன் இருக்கிறது.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் சக்தி நம்முடன் நிற்கிறது. அப்படி எனும் போதும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமில்லை. உலகம் முழுவதும் வாழும் நூற்றுக்கும் மேலான நாடுகளில் வசிக்கும் தாய் தமிழ் உறவுகள் தளபதி விஜய், விஜி, விஜய் தளபதி கோடிக்கணக்கானவர்கள் ஆசி நம்முடன் இருக்கும்போது பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்து கொள்ள உலகமகா ஊழல் கட்சியா நாம்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications