கள்ளக்குறிச்சி மாணவி இறந்தது ஏன்?.. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகணும்.. பிரேமலதா விஜயகாந்த்
மதுரை: பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பது ஏன் என்பது குறித்து துரிதமாக விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவரிடம் மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்தி வருவதாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, மக்களுக்கு அனைத்து வரிகளும் விலைவாசி உயர்வும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட அனைத்து விலைவாசி பெட்ரோல், டீசல் என எல்லாமே விலைவாசி உயர்ந்துள்ளது.

ஜிஎஸ்டி
இது தவிர ஜிஎஸ்டி எனக் கூறி ஏற்கெனவே நிறைய வரிச்சுமை போடப்பட்டுள்ளது. வருமானத்திற்கு என்ன வழி இருக்கிறது. அதை அரசாங்கம் யோசிக்க வேண்டும் அரசாங்கம் என்பது மக்களுக்காக தான். கொரோனாவில் இருந்து இன்னும் மக்கள் மீளாத சூழ்நிலையில் வருமானம் இன்றி மக்கள் எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்கும் போது அரசுக்கு மட்டும் வருமானம் வரவேண்டும் என்று குறிக்கோளாக இருப்பது தவறான விஷயம்.

பேக் செய்யப்பட்ட உணவு
இப்போது பேக் செய்யப்பட்ட அனைத்து உணவுகளுக்கும் ஜிஎஸ்டி என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதற்காகத்தான் தேமுதிக சார்பில் தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மதுரை வந்த நோக்கமும் அது தான். மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்கான அரசாங்கம் இருந்தால் தான் வரவேற்கக் கூடியதாக இருக்கும். எனவே கேப்டன் கூறியபடி விலைவாசிகளை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பள்ளி மாணவிகள்
தொடர்ந்து பல்வேறு காரணங்களால் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்யும் நிகழ்வு நடைபெறுவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, இது குறித்து நேற்று கேப்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி இறந்தது எல்லோருக்கும் ஒரு பெரிய அதிர்வலையை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் ஈரம் கூட காயாத சூழ்நிலையில் தினந்தோறும் மாணவிகள் தற்கொலை சம்பவம் நடைபெறுகிறது.

சிபிசிஐடி
இந்த வழக்கை பொறுத்தவரை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் போதாது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உண்மையில் அந்த மாணவிகள் கொலை செய்யப்படுகிறார்களா.? அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்களா.? என்பதை முதலில் தெரியப்படுத்த வேண்டும். தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடாமல் உண்மையில் என்ன நடக்கிறது என உண்மையை தெரியப்படுத்த வேண்டும்.

மாணவிகள் தற்கொலை
மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றால் அதற்கான அழுத்தம் வர யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி மாணவிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மீது நடத்தப்படும் விசாரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சி
அதற்கு அவர் பதிலளிக்கையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பல்வேறுபட்ட ஊழல் வழக்குகளை சுமத்தினார்கள். இன்று காங்கிரஸ் ஆட்சியில் இல்லை பாஜக ஆட்சி இருப்பதால் காங்கிரஸ் மீது எப்போதோ போடப்பட்ட அந்த ஊழலை கொண்டு வருகிறார்கள். யார் ஆளுங்கட்சியாக இருக்கிறார்களோ ஏற்கனவே ஆண்ட கட்சி மீது ஊழல் வழக்கு கொண்டு வருவது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருந்து வருவதற்கான ஒரு விஷயம்.!

தண்டனையை
யாராக இருந்தாலும் தப்பு செய்திருந்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டும். உண்மையிலேயே தவறு செய்திருந்தால் காங்கிரஸ் கட்சி தண்டிக்கப்பட வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கேப்டன் சொன்னது போல உப்புத் திண்பவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். தவறு செய்தால் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் சமம் தான். உண்மையில் தப்பு செய்திருந்தால் தண்டனை கிடைக்கும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications