மதுரை சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து.. ரூ.37 கோடி மதிப்பில் பொருட்கள் சேதம்.. மொத்தமாக 4 தளங்கள் பாதிப்பு
சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்தில் ரூ.37 மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மதுரை: மதுரை சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்தில் ரூ.37 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ், உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மெத்தைகள் ஆகியவை சேதமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் இரு நாட்களாக தீயை அணைக்க போராடி வந்த சூழலில், 6வது முதல் 9வது தளம் வரை தீ பரவியதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக 10 தளங்கள் கொண்ட சரவணா ஸ்டோர்ஸ் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
பார்கிங் வசதிகளுடன் கூடிய இந்த வணிக வளாகத்தில் தங்க நகை முதல் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபர்னிச்சர்கள் , மளிகை பொருட்கள் என ஏராளமான பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

மதுரை சரவணா ஸ்டோர்ஸ்
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே சரவணா ஸ்டோர்ஸ் அமைந்திருப்பதால், இப்பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக வேன்கள் மூலம் வணிக வளாகத்திற்கு வந்து செல்ல சிறப்பு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். பலரையும் வியக்கவைக்கும் பிரமாண்ட கட்டிடமாக பார்க்கப்படும் இந்த வணிக வளாகத்தில் திடீரென மார்ச் 1ம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டது.

சூழ்ந்த கரும்புகை
சரவணா ஸ்டோர் உணவு விடுதி அமைந்திருந்த கட்டடத்தின் 9 மற்றும் 10 ஆகிய தளங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக பொதுமக்களும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விடாமல் தீ எரிந்ததால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. புகை மூட்டத்தில் சிக்கி 4 ஊழியர்கள் மயக்கமடைந்தனர். அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரு நாட்களாக எரிந்த தீ
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களும் ஊழியர்களும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் பின்னர் தீ தொடர்ந்து எரிந்ததால் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் நேரில் வந்து ஆய்வு செய்தார். கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு மேலாக சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியாகிக் கொண்டே இருந்தது. பின்னர் இரண்டு நாட்களுக்கு பின் தீ அணைக்கப்பட்டது.

ரூ.37 கோடி சேதம்
இந்த நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து தொடர்பாக மதுரை மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்தில் சுமார் ரூ.37 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் 9வது தளத்தில் பற்றிய தீ, வேகமாக 6வது தளம் வரை பரவியுள்ளது. இதில் எலெக்ட்ரானிக்ஸ், மரப் பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications