மதுரை பில் கலெக்டர்கள்.. "அங்கேயே" கை வெச்சுட்டாங்களா? சொத்து வரியால் ஆடிப்போன மாநகராட்சி ஆணையர்
மதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அரசு அதிகாரிகள், முறைகேடுகளில் சிக்கி வருவது, பெருத்த கவலையையும் மக்களிடம் உண்டுபண்ணி வருகிறது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலத்திற்குட்பட்ட 100 வார்டுகளில், வணிக வளாகங்கள், கடைகள் உட்பட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில், 6 மாதத்திற்கு ஒரு முறை சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது.

அதேபோல, ஒவ்வொரு வார்டிலும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களை, அந்தந்த மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் தலைமையில் பில் கலெக்டர்கள் நேரடியாகவே சென்று கண்காணித்து, ஆய்வு மேற்கொண்டு, அளவீடு செய்து, வரியை நிர்ணயம் செய்கிறார்கள்
மதுரை மாநகராட்சி: அதாவது, புதிதாக சொத்து வரி விதிப்பது, தொடர்ந்து வரி வசூல் செய்வது போன்ற பணிகள் ஆன்லைனில் ஒரு சாப்ட்வேர் மூலம் பில்கலெக்டர்கள் செய்து வருகிறார்கள்.
ஆனால், சமீபகாலமாகவே, இந்த செயல்பாடுகளில் பில் கலெக்டர்கள் ஈடுபடவில்லையாம்.. சொத்து வரியையும் நிர்ணயம் செய்யாமல், வரிவசூலையும் கண்காணிக்காமல் இருந்துள்ளனர்.. அப்படியே சொத்து வரி நிர்ணயித்தாலும், குறைவாகவே சொத்து வரி நிர்ணயம் செய்து வந்துள்ளனர்.. அதிலும், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்றால், சொத்து வரி வசூல் செய்யாமல் இருந்து வந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், இந்த விவகாரங்களை கையில் எடுத்தார்.. சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டிடங்களை, மாநகராட்சி மைய அலுவலகத்தில் வாரந்தோறும் ஆய்வு செய்து வருகிறார். அப்படித்தான், கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு கூட்டம் நடந்துள்ளது..
சொத்துவரி: ஆன்லைனில் சொத்து வரியை ஆய்வு செய்தபோது திடீரென்று சில கட்டிடங்களை சொத்து வரி நிர்ணயம் செய்ததில் காணவில்லை என்பதும், அங்கு சொத்து வரியை முறைகேடாக குறைத்ததும் தெரிய வந்தது...
இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் 100 வார்டுகளிலும் 2 உதவி ஆணையாளர்கள் தலைமையில் சிறப்புக்குழுவை அமைத்து, அனைத்து கட்டிடங்களுக்கான சொத்து வரியை ஆய்வு செய்ய அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
சஸ்பெண்ட்: இதில், பில் கலெக்டர்களே, சொத்து வரி நிர்ணயம் செய்ததில் முறைகேடாக ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அதன்படி, 76வது வார்டு பில்கலெக்டர் கே.ராமலிங்கம் (மண்டலம்-3), பி.மாரியம்மாள் (5வது மண்டலம் இளநிலை உதவியாளர்), 6வது வார்டு பி.ரவிச்சந்திரன் (1வது மண்டலம்), 64வது வார்டு பில்கலெக்டர் எம்.கண்ணன்(2வது மண்டலம்), 85வது பில்கலெக்டர் பி.ஆதிமூலம் (4வது மண்டலம்) ஆகியோர், முறைகேடு செய்துள்ள நிலையில், இவர்கள் அனைவரையுமே சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் ஆணையர்.
எப்போதுமே, புதிதாக ஒரு சொத்து வரி விதிக்க வேண்டுமென்றால், அந்த வரியை குறைப்பதற்கான அதிகாரத்துக்கு உண்டு.. கோர்ட் மூலம் ஆணைப்பெற்று, வரியை குறைக்க வேண்டும்.. அல்லது மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி சொத்து வரியை குறைக்க முடியும்.
பில் கலெக்டர்கள்: ஆனால், இந்த 2 நடைமுறைகளையும் பின்பற்றாமல், கடந்த 2022, 2023ம் ஆண்டுகளில், 150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை பில்கலெக்டர்கள் குறைத்திருக்கிறார்களாம்.. இதனால், மாநகராட்சிக்கு வர வேண்டிய சொத்து வரி, கிட்டத்தட்ட ரூ.25 லட்சத்தையும் பில்கலெக்டர்கள் குறைத்துவிட்டதால், ரூ.1.50 கோடி சொத்து வரி இழப்பு மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளதாம். பில் கலெக்டர்களே இப்படி சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டு, சஸ்பெண்ட் ஆகியிருப்பது மதுரையில் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications