ஷாக்கோ ஷாக்.. தாறுமாறாக உயர்ந்த சின்ன வெங்காயம் விலை! தக்காளியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி
மதுரை: நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து இருக்கும் நிலையில் தற்போது தமிழ்நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலையும் கடும் உயர்வை சந்தித்து இருப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
அதிகளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை ரூ.100 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. மதுரையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை இன்று மட்டும் ரூ.30 அதிகரித்து ரூ.190 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளியை போன்றே கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலையும் சற்று ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ.30 அதிகரித்து உள்ளது மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. நேற்று வரை ரூ.120 முதல் ரூ.150 வரை சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. உழவர் சந்தையில் நேற்று நூறு ரூபாய்க்கும் குறைவாக சின்ன வெங்காயத்தின் விலை இருந்து உள்ளது.

சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து இருப்பதால் இப்படி விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகளும், விவசாயிகளும் தெரிவித்து உள்ளார்கள். மொத்த விற்பனை கடைகளில் ரூ.180 க்கும் சில்லரை விற்பனை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.190 க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இன்று காலை மதுரையில் சந்தைக்கு காய்கறி வாங்க சென்ற மக்கள் சின்ன வெங்காயத்தின் விலையை கேட்டு திகைத்துப்போய் இருக்கிறார்கள். அத்தியாவசியமாக உணவுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளான வெங்காயம், தக்காளி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்து இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications