24ஆம் தேதி மதுரைக்கு வருகிறேன்! உற்சாகம் கரைபுரள ஸ்டாலின் சொன்ன தகவல்!
சென்னை: வரும் 24ஆம் தேதி மதுரைக்கு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த மெரினா புரட்சி தமிழர்களின் ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் அமைந்திருந்தது. பள்ளி, கல்லூரி என அனைத்து இடங்களிலும் இதற்காக எழுந்த கூக்குரல்களை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அப்படி மாணவர்களாலும், இளைஞர்களாலும் போராடி பெறப்பட்ட ஜல்லிக்கட்டானது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே கடந்த 3 நாட்களாக மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்ததாக முதல்வர் ஸ்டாலின் ஒரு பதிவு விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல வரும் 24ஆம் தேதி மதுரைக்கு வருகிறேன் எனக் கூறியுள்ள அவர், எதற்காக மதுரை வருகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;
''தமிழரின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர். புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்!''












Click it and Unblock the Notifications