மஞ்சள் பை தவிர.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதம் விலை ஒரேடியாக உயர்ந்தது! இனி ரூ.10 கிடைக்காது
மதுரை: பிரசாத பொருட்களை வாங்கி செல்லும் வகையில் பழைய விலைக்கு பிரசாத பொருட்களின் விலையை குறைக்க பக்தர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனாட்சி அம்மன் திருக்கோவில் நிர்வாகத்திற்க்கும், தமிழக அரசுக்கும் இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. பிரசாதப் பொருட்களின் விலையை குறைக்கவில்லை என்றால் அறவழி மற்றும் சட்டப் போராட்டம் நடத்தப்படும் எனறும் இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாகும்.. இப்போது கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் வந்து செல்கிறார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத கடைகள் 7 செயல்பட்டு வருகின்றன.
பொற்றாமரை குளம் பகுதியில் 2 பிரசாத கடைகளும், அம்மன் சன்னதி, முக்குறுணி விநாயகர் ஆலயம், கொடிமரம் அருகே என மொத்தம் 6 பிரசாத ஸ்டால்களும், கோவிலுக்கு வெளியே கிழக்கு கோபுரம் அருகில் ஒரு பிரசாத ஸ்டால் என்று மொத்தம் 7 பிரசாத ஸ்டால்கள் இயங்கி வருகின்றன,.

பிரசாத ஸ்டால்கள்
இந்த ஸ்டால்களில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு, அதிரசம் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2011-ம் வருடத்திலிருந்து, மேற்கொண்ட பொருட்கள் ரூ.10லிருந்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென பிரசாத பொருட்கள் விலை உயர்ந்துள்ளன..
அதாவது, 175 கிராம் சர்க்கரை பொங்கல், 150 கிராம் புளியோதரை, 140 கிராம் வடை, 50 கிராம் அப்பம், 40 கிராம் தேன்குழல் முறுக்கு, 60 கிராம் லட்டு போன்ற அனைத்துமே இதுவரை 10 ரூபாய் என்றிருந்த நிலையில், தற்போது 15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மஞ்சள் பை விலை குறைவு
மஞ்சள் பை 21 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அது மட்டும் ரூபாய் 15 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது.. மற்றபடி 8 கிராம் குங்குமம் 3 ரூபாய்க்கும், 40 கிராம் குங்குமம் 15 ரூபாய்க்கும், 100 கிராம் குங்குமம் 35 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு காரணமே மூலப்பொருட்களின் விலையேற்றம்தான் என்கிறது கோவில் நிர்வாகம்.. கோவில் நிர்வாகம் சார்பாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இந்து மக்கள் கட்சி
இந்நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலை கண்ணன், தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது, "மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்டால்கள் அமைத்து சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், லட்டு, முருக்கு, புட்டு போன்ற பிரசாதப் பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்படுகிறது.
ரூ.15 ரூபாய் ஏறிய விலை
இந்த பிரசாத பொருட்களின் விலை நேற்று முதல 50 சதவிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பக்தர்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளித்துள்ளது. ரூ.10-க்கு விற்கப்பட்ட பிரசாத பொருட்கள் ரூ.15 என உயர்த்தப்பட்டுள்ளது.
சபரிமலை சீசன் தொடங்கியதால் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமலும், பக்தர்களிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமலும் வியாபார நோக்கத்தோடு பிரசாத பொருட்களின் விலையை திடீரென ஏற்றியதை இந்து மக்கள் கட்சி கண்டிக்கிறது.
இந்த விலை உயர்வுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் இதற்கு முன்னர் 2011-ல் பிரசாதப் பொருட்களின் விலை பத்து ரூபாயாக உயர்த்தப்பட்டது என்றும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விலையேற்றப் பட்டுள்ளது என்றும் தனியார் உணவகங்களின் விலையை ஒப்பிட்டு விலை உயர்த்துவதற்கான காரணத்தை கூறுவது ஏற்புடையது அல்ல.
சொத்துக்கள் தானம்
அப்படி என்றால் பல ஆயிரம் கோடிக்கு சொத்துள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவிலும், வருமானம் பார்க்கும் தனியார் உணவகங்களும் ஒன்றா என்பதற்கு நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும்.
இத்திருக்கோவிலுக்கு மன்னர்களும், செல்வந்தர்களும், ஜமீன்தார்களும் பக்தர்களுக்காக வழங்கப்பட்ட ஏராளமான சொத்துக்களும், வருமானமும் இருந்து வரும் நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்ய வரும் ஏழை, எளிய பக்தர்களுக்கு கட்டணமில்லா பிரசாத பொருட்களை வழங்குவதை விட்டுவிட்டு தனியார் உணவகங்கள் போல் திருக்கோவிலில் பக்தர்கள் தலையில் பிரசாத பொருட்களின் விலையை ஏற்றுவதை எந்த விதத்தில் நியாயம்? இதற்காக தான் நம் முன்னோர்கள் திருக்கோயிலுக்கு சொத்துக்களை தானமாக வழங்கினார்களா?
இந்துக்களுக்கு விரோத அரசு
அரசு கட்டுபாட்டில் இல்லாமலும் அரசுக்கு வருமானம் இல்லாத மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் அம்மதத்தை சார்ந்தவர்களுக்கு வாகனக் கட்டணம் உள்பட அனைத்து இலவச சலுகைகளும், வசதிகளும் செய்து கொடுக்கும் இந்த திராவிட மாடல் அரசு, திருக்கோயில் வருமானத்தை அரசு எடுத்து கொண்டு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு செல்லும் இந்துக்களுக்கு மட்டும் எந்த ஒரு சலுகையும் வசதியும் இல்லாமல் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதும், பிரசாத பொருட்களின் விலையை ஏற்றுவதும் தான் திராவிட மாடல் அரசா?
அனைவருக்குமான மதசார்பற்ற அரசு என்று கூறி கொள்ளும் தமிழக முதல்வர் அவர்கள் இந்துக்களுக்கு விரோதமான அரசு என்று நிறுவிப்பது போல் தெரிகிறது.
எனவே உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயில் ஸ்தலத்தை வியாபார ஸ்தலமாக மாற்றுவதை நிறுத்திவிட்டு இத்திருக்கோவிலில் பிரசாத பொருட்களின் விலை ஏற்றத்திற்கு பக்தர்களிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் சபரிமலை சீசனை மனதில் வைத்து கொண்டு வியாபார நோக்கத்தோடு ஏழை, எளிய பக்தர்கள் வேதனை படுகின்ற வகையில் பிரசாத பொருட்களின் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
போராட்டம் நடத்தப்படும்
பக்தர்கள் அனைவரும் திருக்கோவிலின் பிரசாத பொருட்களை வாங்கி செல்லும் வகையில் பழைய விலைக்கு பிரசாத பொருட்களின் விலையை குறைக்க பக்தர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனாட்சி அம்மன் திருக்கோவில் நிர்வாகத்திற்க்கும், தமிழக அரசுக்கும் இந்து மக்கள் கட்சி சார்பில் இக்கோரிக்கையை முன்வைக்கிறது.
பிரசாதப் பொருட்களின் விலையை குறைக்கவில்லை என்றால் அறவழி மற்றும் சட்டப் போராட்டம் நடத்தப்படும்." என்றும் தன்னுடைய அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications