பளபளன்னு பழங்காநத்தம்.. பல்லிளிக்குதா பசுமலை? பிரதமர் மோடி வர்ற நேரத்துல.. இதுவேற? வியந்து போன மதுரை
மதுரை: பிரதமர் மோடியின் மதுரை வருகையானது, மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் பாஜகவினருக்கு ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், பிரதமரின் வருகையையொட்டி, சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், வாகன ஓட்டிகளிடமிருந்து எழுந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, தமிழக பாஜக தலைவர் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள வந்திருந்தார். ஆனால், இவர் வருவதற்கு முன்பு, அங்கிருக்கும் சாலைகளில் அவசர அவசரமாக தார் ரோடு போடப்பட்டதாம்..

"இங்கு பல காலமாகவே, குண்டும் குழியுமாக சாலைகள் உள்ளன.. அண்ணாமலை வந்தால், இதுகுறித்து நிச்சயம் கேள்வி கேட்பாரு? ஆளும் கட்சியை சகட்டுமேனிக்கு விமர்சிப்பார் என்பதால், அவசரமா வேலை நடந்துகிட்டு இருக்கு... ஜல்லி, சிமெண்ட் கலவை கொண்டு பேட்ச் ஒர்க் நடந்துட்டு இருக்கு.. ஆனால், தேர் திருவிழாவிற்காக வேலை நடப்பதாக அதிகாரிகள் காரணம் சொல்கிறார்கள்" என்று அந்த பகுதி தெரிவித்திருந்தனர்.
சோஷியல் மீடியா: இது தொடர்பான வீடியோக்களும் அப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.. இதற்கான நிஜகாரணமும் தெரியாது. ஆனால், பிரதமர் வரப்போகிறார் என்றதுமே மதுரை ரோடு பளபளவென மாறியிருக்கிறதாம்.
பிரதமர் மோடி, நாளை 27-ம் தேதி மதுரை வீரபாஞ்சான் டிவிஎஸ் பள்ளியில் நடக்கும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கத்தில் பங்கேற்று பேசுகிறார். பிறகு, சாலை மார்க்கமாக வீரபாஞ்சானில் இருந்து காரில் பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டல் சென்று இரவு தங்கிவிட்டு மறுநாள் தூத்துக்குடியில் நடக்கும் இனனொரு நிகழ்ச்சிக்கு மதுரையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் செல்கிறார்.
திருப்பரங்குன்றம்: பிரதமர் வருவதாக எதிர்பார்க்கப்படும் பழங்காநத்தம்- பசுமலை சாலை, கற்கள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளதாம். இந்த சாலையில்தான் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உள்ளது. ஏராளமான பள்ளி, கல்லூரிகள் உட்பட திருமங்கலம், திருநகர் போன்ற முக்கிய நகர் பகுதிகளும் உள்ளன.
எனவே, பழங்காநத்தம் வழியாக செல்லும் திருப்பரங்குன்றம் சாலையானது, மிக முக்கியமான போக்குவரத்தை கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சாலை படுமோசமாக இருப்பதாகவும், பிரதமர் வருவதாக சொல்லப்படும் இந்த சாலை சீரமைக்கப்படவில்லை, அவர் வருகையை ஒட்டியாவது இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் கிளம்பி உள்ளன.
பழங்காநத்தம் ரோடு: இந்நிலையில், மதுரை பழங்காநத்தம் ரோடு புதுப்பொலிவு பெற்றுவிட்டதாக இன்னொரு தகவல், ஒருசில மீடியாக்களில் வெளியாகி உள்ளது.. மதுரை - திருநகர் இடையேயான 6 கிமீ ரோடு, ரூ. 40 கோடியில் விரிவுபடுத்தப்பட்டு வரும்நிலையில், அழகப்பன் நகர் ரயில்வே கேட் துவங்கி, பழங்காநத்தம் ரவுண்டானா வரை பல மாதங்களாகவே குண்டும், குழியுமாக கிடந்தது.
மேலும், பழங்காநத்தம் பாலத்தின்கீழ், ஜங்ஷன் பகுதியில் போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இப்போது பிரதமர் மோடியின் மதுரை வருகையால் தற்காலிக தீர்வு கிடைத்து விட்டதாம். பிரதமரின் வருகையையொட்டி பழங்காநத்தம் ரோடு புதுப்பொலிவு பெற்று வருவதாகவும், இந்த ரோட்டில் இருந்த மேடு பள்ளங்கள் சரிசெய்யப்பட்டு, பழங்காநத்தம் சாலையே புதுப்பொலிவு பெற்று வருவதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாறுபட்ட செய்தி: ஆக, பழங்காநத்தம் சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழும் அதேசமயம், பழங்காநத்தம் சாலை தற்காலிக புதுப்பொலிவு பெற்றுவிட்டதாக, 2 முரண்பட்ட செய்திகள், இன்றைய ஒரே தினத்தில் சோஷியல் மீடியாவில் ஷேர் ஆகிக்கொண்டிருக்கின்றன.
இதில் எது நிஜம் என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், பிரதமர் மோடியின் இந்த வருகையானது, மதுரை தொகுதியில் புதிய திருப்பத்தை கொண்டுவரும் என்று பெருத்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பாஜகவினர்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications