"விலக்கு தரவே முடியாது.." திருப்பரங்குன்றம் விவகாரம்.. கோபமடைந்த நீதிபதி சுவாமிநாதன் முக்கிய உத்தரவு
மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்த விவகாரத்தில் இன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இதில் நீதிபதி சுவாமிநாதன் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்குக் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படும் நிலையில், அது வழக்கமாக அங்குள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும். ஆனால், கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என ராம ரவிக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தீபம் விவகாரம்
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஆணையிட்டார். இருப்பினும், உச்சி பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே இந்தாண்டு தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்பாக இப்போது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது. முதலில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரதான வழக்கின் மேல்முறையீடு. இதை நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரிக்கிறார்கள்.
மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தனியாக இருக்கிறது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனே விசாரிக்கிறார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜிஆர் சுவாமிநாதன் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது அவர் சில கோபமான கருத்துகளைக் கூறினார்.
நீதிபதி உத்தரவு
அப்போது அவர், "நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும்.. நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் மதிக்கவில்லை என்றால் சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தே அர்த்தமற்றதாகிவிடும்" என்றார். மேலும், இது முக்கியமான விவகாரம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் நிலைப்பாட்டை விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்
நேரில் ஆஜராகணும்
மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆட்சியர், காவல் ஆணையர் மீண்டும் ஆஜராகவும் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஜனவரி 9ம் தேதி இந்த வழக்கை ஒத்திவைத்த நீதிபதி சுவாமிநாதன் அப்போது இருவருமே நிச்சயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், ஆஜராவதில் இருந்து யாருக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்தார்.
முன்னதாக விசாரணை நடந்தபோது திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என்றும் ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் பிறப்பித்தோம் என்றும் தலைமைச் செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பிக்கும்போது சட்ட ஒழுங்கு காரணம் காட்டி அதை நிறைவேற்றாமல் இருப்பது என்ன செயல்" என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
காட்டம்
மேலும், நேற்றைய தினம் பிரதான வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுவாமிநாதன் சீக்கிரமே அரசியலில் வருவார் என்றும் தேர்தலில் கூட போட்டியிடலாம் என போலீஸ் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்திருந்தார். இன்றைய விசாரணையில் அதைக் குறிப்பிட்ட நீதிபதி சுவாமிநாதன், இது தொடர்பாகத் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications