குடிகாரர்களுக்கு ஷாக்.. ஆகஸ்ட் 21ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு 21ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் நிலையில் இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் வட்டத்தில் பத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் நான்கு தனியார் மதுபான விடுதிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார். கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகத்தை விஜய் ஆரம்பித்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
கடந்த ஆண்டு வட மாவட்டமான விழுப்புரத்தில் முதல் மாநில மாநாடு நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாவது மாநில மாநாட்டை தென்னகத்தில் நடத்துகிறார் விஜய். இதற்காக மதுரை மாவட்டம் பாரப்பத்தி பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுப் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது.

விஜய்
கடந்த மாநாட்டை போலவே மிக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் 10 லட்சம் பேர் வரை மாநாட்டில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாநாட்டை போல சிறு தவறு கூட நடந்து விடக் கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து ஏற்பாடுகளை செய்து வருகிறார் விஜய். பிரம்மாண்ட மேடை, சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு ராம்ப் வாக், ஒரு லட்சம் பேருக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் ஒன்றரை லட்சம் ஆண்கள், இருபதாயிரம் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
மாநாட்டு மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு, மருத்துவக் குழு, வழக்கறிஞர் குழு, தன்னார்வாளர்கள் குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக விஜய் மாநாட்டில் அவசர தேவைகளுக்கு மருந்துகள், குடிநீர் உள்ளட்டவை ட்ரோன்கள் மூலம் வழங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் 21ஆம் தேதி மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் மதுரையில் முகாமிட்டு மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மதுரை மாநாடு
அதே நேரத்தில் காவல் துறை தரப்பில் மாநாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 45 கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் அளித்து இருக்கிறது. மாநாட்டுக்கு வருபவர்கள் இருசக்கர வாகனங்களில் வரக் கூடாது, பேருந்துகளில் தான் வர வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காவல்துறை தரப்பில் விதிக்கப்பட்டிருக்கிறது.
டாஸ்மாக் விடுமுறை
இந்த நிலையில் மாநாட்டின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் முக்கிய உத்தரவு ஒன்றை மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. அதாவது விஜய் மாநாடு நடைபெறும் பாரப்பத்தி பகுதி இடம் பெற்றிருக்கும் திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் மது கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. 10 டாஸ்மாக் கடைகள் நான்கு தனியார் மதுபான கூட்டங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications