புனேவில் விபத்தில் சிக்கிய தனியார் ஹெலிகாப்டர்! விமானி காயம்.. 3 பேர் பத்திரமாக மீட்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து, தெலுங்கானாவின் ஹைதராபாத் நோக்கி வந்துக்கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியிருக்கிறது. இதில் 4 பேர் வரை பயணித்திருக்கின்றனர்.
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், விபத்தில் சிக்கியது தொடர்பாக புனே போலீசார் விளக்கமளித்துள்ளனர். "ஹைதராபாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் புனே மாவட்டத்தில் உள்ள பாட் கிராமம் அருகே விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பயணித்தவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறியிருந்தார்.

மோசமான வானிலை காரணமாக இந்த ஹெலிகாப்டர் விபத்து நடந்தது என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல இதில் பயணித்தவர்கள் யார்? அவர்களின் நிலை என்ன? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரில், விமானி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 3 பேரின் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என புனே எஸ்பி பங்கஜ் தேஷ்முக் கூறியுள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2021ம் ஆண்டு, ராணுவத்தின் அப்போதைய தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் இதேபோன்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
