உறைந்த மும்பை.. பேஸ்புக் லைவ் வீடியோவில் சிவசேனா உத்தவ் கட்சி நிர்வாகியின் மகன் சுட்டுக்கொலை
மும்பை: மகாராஷ்டிராவில் பேஸ்புக் நேரலையில், சிவசேனா உத்தவ் கட்சி நிர்வாகியின் மகன் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இந்த நிகழ்வு அப்படியே பேஸ்புக் லைவில் வீடியோவாக வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக நேற்று ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியது. பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிக்கொண்டு இருந்த நபர் மீது திடீரென ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சினிமா படங்களை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மகராஷ்டிர மாநிலம் மும்பையில் உத்தவ் பாலாசகேப் தாக்கரே சிவசேனா கட்சி முன்னாள் எம்.எல் ஏ வினோத் கோசல்கர். இவருடைய மகன் அபிஷேக். இவரும் முன்னாள் கவுன்சிலர் ஆவார். மும்பை தகிஷர் பகுதியில் உள்ள எம்எச்பி காலனி போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட பகுதி ஒன்றில் அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் மோரிஸ் என்பவர் விடுத்த அழைப்பை ஏற்று அபிஷேக் சென்றதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்த நிலையில், தற்போது சமாதானம் ஆகி விட்டு பேஸ்புக் லைவ் வீடியோவில் அது தொடர்பாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். வினோத் கோசல்கர் பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசி முடித்து எழுந்து புறப்பட இருந்த நேரத்தில், மோரிஸ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிஷேக்கை சரமாரியாக சுட்டார். இதில் வயிறு, கழுத்து உள்பட உடலில் 3 இடங்களில் குண்டு பாய்ந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதைத்தொடர்ந்து மோரிசும் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டார். இந்த காட்சிகள் பேஸ்புக் லைவ் வீடியோவில் அப்படியே நேரலையாக சென்றது. இதைப்பார்த்தவர்கள் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போயினர். இதற்கிடையே, துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் இருவருமே உயிரிழந்தனர்.
அபிஷேக்கிற்கும், மோரிசுக்கும் இடையே முன்விரோதம் இருந்த நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. மோரிஸ் தனது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக அபிஷேக்கை அழைத்து திட்டமிட்டு சுட்டுக்கொலை செய்துள்ளது தெரியவந்து இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பேஸ்புக் லைவில் வெளியான இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தெரிவித்து வருகின்றன. போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications