மகாராஷ்டிராவில் காங்கிரஸ் களமிறக்கிய தமிழ் வேட்பாளர் கணேஷ் குமார் யாதவ்! சொன்ன "200 சீட்" சீக்ரெட்
மும்பை: "மகாராஷ்டிராவில் இந்த முறை காங்கிரஸ் கூட்டணி 200 இடங்களுக்கும் மேல் நிச்சயம் வெல்லும்" என்று காங்கிரஸ் வேட்பாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான கணேஷ் குமார் யாதவ் கூறியுள்ளார். தமிழர்கள் ஓரளவுக்கு கணிசமாக வசிக்கும் மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் இவர் போட்டியிடுகிறார். இது தாராவிக்கு பக்கத்து தொகுதியாகும்.
மகாராஷ்டிராவில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய உள்ளதால் இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் "ஒன்இந்தியா தமிழ்" குழு நேரடியாக சென்று செய்தி சேகரித்து வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிராவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான மும்பை சயான் கோலிவாடா சட்டமன்ற தொகுதி வேட்பாளரிடம் பேட்டி கண்டது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கணேஷ் குமார் யாதவ் போட்டியிடுகிறார். அனல் பறக்கும் பிரசாரத்திற்கு இடையே கணேஷ் குமார் யாதவ், அங்கிருந்தபடி "ஒன்இந்தியாதமிழ்" எடிட்டர் வீரக்குமரனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பேட்டியின் முழு வீடியோவையும் இந்த லிங்க்கில் கிளிக் செய்து பார்க்கலாம்:
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் வள்ளியூர்தான் எனக்கு சொந்த ஊர். எனது தாத்தாவே மகாராஷ்டிரா வந்துவிட்டார். அதனால், மூன்று தலைமுறைகளாக நாங்கள் மும்பையில் தான் இருக்கிறோம். பிறந்து வளர்ந்ததே மும்பைதான். தமிழ் தாய் மொழி என்றால் மராட்டியம் அத்தை மொழி என்று சொல்லலாம். கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டேன்.ஆனால் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துவிட்டேன்.
ஆனால் இந்த முறை லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டது. எனவே இந்த முறை வெற்றி நிச்சயம். கடந்த முறை சிவசேனா இல்லை. இந்த முறை சிவசேனா எங்களுடன் உள்ளது. வாக்குகளை உடைக்கும் இதர கட்சிகளையும் மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். எனவே வெற்றி நிச்சயம். பாஜக கூட்டணி மீது மக்கள் கோபமாக உள்ளனர். இந்த தொகுதியில் ஒரு வளர்ச்சி திட்டம் கூட செயல்படுத்தவில்லை.
கடந்த 10 வருடமாக இங்கு எம்.எல்.ஏவாக இருக்கும் பாஜகவின் தமிழ்செல்வன் எந்த வளர்ச்சி திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. 200 தொகுதிகளுக்கும் மேல் இந்த முறை காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். பாஜக கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். எனவே இந்த முறை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெரும். இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரும் தமிழர்தான். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழர்தான் என்பது குறித்து கேட்ட போது, "உழைப்பவர்களுக்கு சீட் கிடைக்கும். பாஜகவை பற்றி எனக்கு தெரியாது. காங்கிரஸ் கட்சியில் 15 ஆண்டுகளாக நான் இங்கே பணியாற்றி வருகிறேன்" என்றார்.
மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டுள்ள கணேஷ் குமார் யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், ஆந்திரா மற்றும் அந்தமானில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளாராகவுவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications