மனைவியாகவே இருந்தாலும்... மைனர் பெண்ணுடன் உடலுறவு கொள்வது பலாத்காரம் தான்! மும்பை ஐகோர்ட் தீர்ப்பு
மும்பை: நமது நாட்டில் பெண்கள், மைனர் சிறுமிகள் பாதுகாப்பை உறுதி செய்ய நீதிமன்றங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஒரு வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை மிக முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது மைனர் வயது பெண்ணுடன், அது மனைவியாகவே இருந்தாலும், உடலுறவு கொள்வது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் என்று கூறியுள்ளது.
நமது நாட்டை பொறுத்தவரைப் பெண்கள் திருமண வயது 18ஆக உள்ளது. சட்டப்படி 18 வயதுக்கு கீழ் உள்ள மைனர் சிறுமிகளுக்குத் திருமணம் செய்ய முடியாது.

இருப்பினும், சட்டத்திற்குப் புறம்பாக 18 வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்குத் திருமணம் நடக்கிறது. இதற்கிடையே மைனர் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இப்போது மும்பை நீதிமன்ற நாக்பூர் கிளை மிக முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
பலாத்காரமாகவே கருதப்படும்: அதாவது மனைவியாகவே இருந்தாலும், மைனர் பெண்களுடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரமாகவே கருதப்படும் என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மைனர் மனைவியின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டாலும் அது குற்றம் தான் என்றும் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்றும் கூறிய ஐகோர்ட், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஏ.சனப் தலைமையிலான அமர்வு, "நமது நாட்டில் உடலுறவுக்கு ஒப்பு கொள்ளும் age of consen என்பது 18ஆக இருக்கிறது. எனவே, 18 வயதுக்குட்பட்ட பெண்ணுக்குத் திருணமாகி இருக்கிறதா.. இல்லையா என்பது முக்கியம் இல்லை.. அவருடன் உடலுறவு கொள்வது பலாத்காரமாகவே கருதப்படும்.
தண்டனை உறுதி: சட்டம் இப்படித் தெளிவாக இருக்கும் போது, மனைவி 18 வயதுக்குக் கீழ் இருக்கும் போது அவரது சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டேன் என்று அந்த இளைஞர் சொல்வதை ஏற்க முடியாது" என்று கூறி கீழமை நீதிமன்றம் அந்த இளைஞருக்கு வழங்கிய 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை உறுதி செய்தது.
பின்னணி என்ன: பாதிக்கப்பட்ட சிறுமியுடன் அந்த நபர் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டதால் அவர் கருவுற்று இருக்கிறார். இதனால் வேறு வழியின்றி அந்த சிறுமியை அவர் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இருப்பினும், திருமணமாகி சில காலத்திலேயே இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரே அந்த சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைக் குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், "அவர்களுக்கு இடையே நடந்தது திருமணம் என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றாலும் கூட,, தனது சம்மதத்திற்கு எதிராக உடலுறவு நடந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். எனவே, இதைப் பலாத்காரமாகவே கருத முடியும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: இந்தச் சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடந்துள்ளது பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளியும் அருகருகே வசித்து வந்துள்ளனர். இருவரும் 2019க்கு முன்பு சில ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும், அந்த பெண் நெருக்கமாக இருக்க மறுத்தே வந்துள்ளார். அப்போது தான் ஒரு கட்டத்தில் வற்புறுத்தி உடலுறவு கொண்டு இருக்கிறார். இதில் அந்த பெண் கர்ப்பமானதால் வேறு வழியின்றி திருணம் செய்து கொண்டுள்ளான்.
இருப்பினும், திருணமான கொஞ்ச நாட்களிலேயே அந்த சிறுமியைக் குற்றவாளி அடித்துத் துன்புறுத்தத் தொடங்கியிருக்கிறான். மேலும், அந்த குழந்தைக்குத் தான் தந்தை இல்லை என்றும் வேறு ஒருவருடன் அந்த சிறுமிக்கு உறவு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் 2019ம் ஆண்டு மே மாதம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முக்கிய கருத்து: ஐகோர்ட் நீதிபதி மேலும் கூறுகையில், "இந்த வழக்கில் இரண்டு விஷயங்களைக் கவனித்தே தீர்ப்பளித்து இருக்கிறோம். முதலில் குற்றம் நடந்த போது அந்த பெண் மைனர் சிறுமி.. அடுத்து அந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனையில் பாதிக்கப்பட்டவர் நபர் தான் தந்தை என்பது உறுதியாகி இருக்கிறது" என்று கூறி தண்டனையை உறுதி செய்தார்.












Click it and Unblock the Notifications