"அந்த மனசு தான் சார் கடவுள்.." ரத்தன் டாடா உயிலில் செல்ல நாய்க்கு பராமரிப்பு! ஊழியர்களையும் மறக்கல
மும்பை: நாட்டின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த ரத்தன் டாடா சில வாரங்களுக்கு முன்பு காலமானார். அவர் வசம் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் இருந்த நிலையில், அதில் எதை யாருக்குத் தர வேண்டும் என்பது குறித்த தகவல்களை அவர் உயிலாக எழுதி வைத்து இருந்தார். அது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள மிக முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்று டாடா குழுமம். வீட்டில் உபயோகிக்கப்படும் உப்பு முதல் சொகுசு கார் வரை பல்வேறு பொருட்களை டாடா நிறுவனம் தயாரிக்கிறது.

ரத்தன் டாடா: டாடா குழுமத்தை இந்தளவுக்கு மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக மாற்றியதில் ரத்தன் டாடாவின் பங்கு முக்கியமானது. இவரது காலத்தில் தான் டாடா நிறுவனம் பெரிய வளர்ச்சியை அடைந்தது. இம்மாத தொடக்கத்தில் ரத்தன் டாடாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த அக்.9ம் தேதி அவர் காலமானார்.
இதற்கிடையே ரத்தன் டாடாவின் உயில் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி சொத்திற்கான இந்த உயிலில், ரத்தன் டாடா தனது செல்ல நாய் டிட்டோவை குறிப்பிடத் தவறவில்லை. தான் போனாலும் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் டிட்டோவை வாழ்நாள் முழுக்க கவனித்துக் கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை ரத்தன் டாடா செய்துவிட்டே சென்றுள்ளார்.
யாருக்கு என்ன: 10,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களின் ஒரு பகுதியைத் தனது அறக்கட்டளைக்கு அவர் ஒதுக்கி இருக்கிறார். மேலும், சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபோய் ஆகியோருக்கும் குறிப்பிட்ட சொத்துகளைக் கொடுத்துள்ளார். மேலும், வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள், நெருக்கமானவர்களுக்கும் அவர் சொத்துகளைத் தனது உயிலில் ஒதுக்கி இருக்கிறார்.
செல்ல நாய்: ரத்தன் டாடாவுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் டிட்டோ என்ற நாயை வளர்த்து வந்தார். தான் உயிரிழந்தாலும் டிட்டோ சவுகரியமாக இருக்க வேண்டும் என்பதை டாடா தனது உயிலில் உறுதி செய்துள்ளார். அதன்படி டாடாவின் நீண்ட கால சமையல்காரரான ராஜன் ஷாவால் டிட்டோவை பார்த்துக் கொள்வார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 30 ஆண்டுகளாக டாடாவின் பட்லராக இருந்த சுப்பையாவுக்கும் இந்த உயிலில் டாடா சொத்துகளை வழங்கியுள்ளார்.
பங்குகள்: பல்வேறு டாடா குழுமத்திலும் ரத்தன் டாடாவுக்கு பங்குகள் இருந்தன. அவை ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கு மாற்றப்படும். ரத்தன் டாடா கடந்த 2022ம் ஆண்டு இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார். இதன் மூலம் அவர் ஸ்டார்அப் நிறுவனங்களுக்கு நிதி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடுவின் பெயரும் உயிலில் இடம்பெற்று இருக்கிறது. வெளிநாட்டுப் படிப்புக்கான கடனைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட சில பாயிண்டுகள் சாந்தனு நாயுடு தொடர்பாக இருக்கிறதாம்.
வீடு மற்றும் கார்கள்: டாடா வசித்த கொலாபாவில் உள்ள ஹலேகாய் வீடு, டாடா சன்ஸ் துணை நிறுவனமான எவார்ட் இன்வெஸ்ட்மென்ட்டுக்கு சொந்தமானது. அதேபோல டாடா ஹலேகாய் இல்லம் மற்றும் அலிபாக்கில் ஒரு பங்களாவை ரத்தன் டாடா வடிவமைத்து இருந்தார். அந்த வீடுகள் என்ன ஆகும் என்பது உயிலில் இல்லை. அவரது உயில் உடனடியாக செயல்படுத்தப்படாது. அது மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டே இறுதி செய்யப்படும். அது இறுதி செய்யப் பல மாதங்கள் வரை கூட ஆகலாம்.
டாடாவின் 20-30 சொகுசு கார்கள் இப்போது அவரது கொலாபா இல்லம் மற்றும் தாஜ் வெலிங்டன் மியூஸ் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ளன. அவை புனேவில் உள்ள அதன் அருங்காட்சியகத்திற்காக டாடா குழுமத்தால் வழங்கப்படலாம் அல்லது ஏலம் விடப்படலாம் எனத் தெரிகிறது. ரத்தன் டாடாவின் விருதுகள் அனைத்தும் மத்திய ஆவணக் காப்பகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications