தரையை பிளந்தால் பணம்.. சுவரை இடித்தால் வெள்ளி! வாயை பிளந்த அதிகாரிகள்.. ஷாக் தந்த மும்பை தொழிலதிபர்
மும்பை: மகாராஷ்டிராவில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சுவர்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கட்டுக்கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் கணக்கை ஆய்வு செய்த மகாராஷ்டிர ஜிஸ்எடி அமைப்பினர், அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக சந்தேகத்தினர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த தகவலின்படி வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் தான் போலீசார் இப்படிப் பணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

மகாராஷ்டிரா தொழிலதிபர்
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாமுண்டா புல்லியன். கடந்த 2019-20 நிதியாண்டில் இவர் ரூ.22.83 லட்சம் லாபம் எடுத்து இருந்தார். அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 2020-21 நிதியாண்டில் அவரது லாபம் ரூ.652 கோடியாக திடீரென அதிகரித்து உள்ளது. இதேபோல அடுத்த நிதியாண்டில், அதாவது 2021-22 இல் அவரது மொத்த வருவாய் வியக்கத்தக்க வகையில் ரூ.1764 கோடியை எட்டியது. இது மகாராஷ்டிரா ஜிஎஸ்டி அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜிஎஸ்டி அதிகாரிகள்
இந்த விவகாரத்தை மகாராஷ்டிரா மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் வருமான வரித்துறையிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வரும் சாமுண்டா புல்லியனின் சொந்தமான பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல மணி நேரம் நீட்டித்த இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் வெள்ளி
அப்படி சோதனை நடத்தப்பட்ட ஒரு இடத்தில் தான் போலீசார் நிலம் மற்றும் தரையில் மறைத்து வைக்கப்பட்ட பணத்தைக் கண்டுபிடித்தனர். அந்த வீட்டின் தரை மற்றும் சுவர்களின் ஒறு பகுதி சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளது. இதையடுத்து அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் இடித்துள்ளனர். அப்போது அங்கு ரூ.9.78 கோடி ரொக்கமும், ரூ.13 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ வெள்ளி செங்கற்கள் இருப்பதைக் கண்டு போலீசார் மிரண்டு போய்விட்டனர்.

6 மணி நேரம்
இந்த ரொக்கம் மற்றும் வெற்றி தங்களுக்குச் சொந்தமானது இல்லை என அங்கு வசித்தவர்கள் மறுத்தனர். மேலும், இந்தளவு ரொக்கம் இருப்பது தங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வீட்டைச் சீல் வைத்த மாநில ஜிஎஸ்டி துறையினர், இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறைக்கு அனுப்பினர். அங்குக் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணி முடிக்க மட்டும் சுமார் 6 மணி நேரம் ஆகியுள்ளது.

அடுத்தகட்ட விசாரணை
இந்த வழக்கில் கைதை தவிர்க்கத் தொழிலதிபர் சாமுண்டா புல்லியன் மும்பை செஷன் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இருப்பினும், முன் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள், தொழிலதிபர் சாமுண்டா புல்லியனை விசாரணைக்காக ஜிஎஸ்டி அதிகாரிகள் முன்பு ஆஜராக உத்தரவிட்டார். இத்தனை கோடி ரூபாய் பணம் சாமுண்டா புல்லியனுக்கு எங்கிருந்து வந்தது என்பது குறித்து அடுத்தகட்ட விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications