ஆசிட் டெஸ்ட்! நேருக்கு நேர் மோதல்.. 2 சிவசேனா.. 2 தேசியவாத காங்கிரஸ்! நிரூபித்த ஷிண்டே, அஜித் பவார்
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று 8 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் - பாஜக 69 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின. சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) - சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) 49 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின. காங்கிரஸ் சரத் பவார் அணியும் - தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியும் 37 தொகுதிகளில் நேருக்கு நேர் களத்தைச் சந்தித்தன. இந்த மோதலில் பாஜகவின்மகாயுதி கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு கடந்த 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 4,136 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் மகாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவியது.

மகாயுதி கூட்டணியில் பாஜக 145 இடங்களிலும், சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 102 வேட்பாளர்களையும், சிவசேனா 95 வேட்பாளர்களையும், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 86 வேட்பாளர்களையும் நிறுத்தின.
இந்த 2 கூட்டணிகள் மட்டுமல்லாது, பகுஜன் சமாஜ் கட்சி 237 வேட்பாளர்களையும், அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) கட்சி 17 வேட்பாளர்களையும் நிறுத்தி தனித்து போட்டியிட்டன. மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் சுவாரஸ்யமாக இந்த முறை தேசியவாத காங்கிரஸ் 2 பிரிவாகவும், சிவசேனா இரண்டு பிரிவாகவும் எதிர் எதிராக நின்றன.
288 சட்டமன்றத் தொகுதிகளில் 69 இடங்களில் பாஜக - காங்கிரஸ் கட்சிகள் நேரடியாகப் போட்டியிட்டது. 2019 சட்டமன்றத் தேர்தலில், பாஜக மற்றும் காங்கிரஸ் 66 இடங்களில் நேருக்கு நேர் மோதின. அவற்றில் பாஜக 50 சீட்களில் வென்றது. காங்கிரஸ் வெறும் 16 இடங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை பாஜகவும் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணியும் 35 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின. பாஜகவும் - சிவசேனா உத்தவ் தாக்கரே அணியும் 29 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. சிவசேனா உத்தவ் தாக்கரே அணியும் - சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணியும் 49 இடங்களில் நேருக்கு நேர் மோதின.

ஆதித்ய தாக்கரே வெற்றி: உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு எதிராக ஷிண்டே தலைமையிலான அணி முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோராவை முக்கிய தொகுதியான வோர்லியில் நிறுத்தியது. இதில் 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்ய தாக்கரே வென்றுள்ளார்.
ஷிண்டே வெற்றி: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது வழிகாட்டியான மறைந்த சிவசேனா தலைவர் ஆனந்த் டிகேவின் மருமகன் கேதார் திகேவை கோப்ரி பச்பகாடி தொகுதியில் எதிர்கொண்டார். அதில் ஏக்நாத் ஷிண்டே, 1.20 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
அஜித் பவார் வெற்றி: தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணியும் - தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியும் 37 தொகுதிகளில் நேரடி போட்டியைச் சந்தித்தன. பவார் குடும்பத்தின் பாரம்பரிய கோட்டையான பாராமதியில் கடும் போட்டி ஏற்பட்டது. இங்கு அஜித் பவார் தனது அண்ணன் மகன் யுகேந்திர பவாரை எதிர்கொண்டார். இதில் 1 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அஜித் பவார் வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணியும் 14 இடங்களில் நேரடியாக மோதின. மகாராஷ்டிராவில் எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது என்பதை இந்த நேரடிப் போர்களின் முடிவு தீர்மானித்துள்ளது. பாஜக - சிவசேனா (ஷிண்டே) - என்.சி.பி (அஜித் பவார்) அணி 231 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், மக்களின் செல்வாக்கு தங்களுக்குத்தான், தாங்கள் தான் உண்மையான சிவசேனா, என்.சி.பி என ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் நிரூபித்துள்ளனர். மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 15 இடங்களையும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்ககளையும், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களையும் மட்டுமே கைப்பற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications