எடப்பாடி மட்டும் இல்லைன்னா.. மகாராஷ்டிரா நிலைதான் தமிழகத்திற்கு.. ஆதரவாளர் பதிவை பாருங்க
மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டும் 120க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெறும் கட்சியாக மீண்டும் உருவாகி உள்ளது. பாஜகவின் இந்த வெற்றிக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவை இரண்டாக உடைத்து ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரை தன்னுடன் சேர்த்து கொண்டது தான் காரணம் என கூறப்படும் நிலையில் தமிழகத்தில் அத்தகைய நிலை ஏற்படாமல் எடப்பாடி பழனிச்சாமி விழிப்பாக செயல்பட்டு பாஜகவுக்கு செக் வைத்ததாக தொண்டர் ஒருவர் புகழ்ந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநிலத்தில் மகாயுதி மற்றும் மகாவிகாஸ் அகாடி ஆகிய கூட்டணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இதில் மகாயுதி என்பது ஆளும் கட்சியின் கூட்டணியாகும். இந்த கூட்டணியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
மறுபுறம் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கேரவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
மதியம் 12.30 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது. மொத்தம் 216 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது. அதன்படி பாஜக 124 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 55 தொகுதிகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. ஆட்சியை பிடிக்க 145 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் தற்போது அந்த கூட்டணி 200க்கும் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மாறாக எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடியில் அதிகபட்சமாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி வேட்பாளர்கள் 20 தொகுதிகளில், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகள் என்று மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
இதன்மூலம் மகாராஷ்டிராவில் மீண்டும் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இதனால் இந்த முறை பாஜக முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு விட்டு கொடுக்காது என்று கூறப்படுகிறது. தேவேந்திர பட்னாவிஸை பாஜக மீண்டும் முதல்வராக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் பாஜகவின் இந்த வெற்றிக்கு சிவசனோ மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 2 ஆக உடைந்தது தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் ‛மகாராஷ்டிரா மாதிரி தமிழகம் மாறாமல் தடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. பாஜகவின் அரசியல் தெரிந்தே அந்த கட்சிக்கு செக் வைத்துவிட்டார் என்று ‛தனபால் ஆறுமுகம்' என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ‛தனபால் ஆறுமுகம்' என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
மஹாராஷ்டிராவில் பிஜேபி பெரும் வெற்றி பெறுகிறது. பிஜேபி செய்த successful operation in MH is, சிவசேனாவை உடைத்து, உடைக்கபட்டப் பிரிவை கைக்குள் போட்டுக்கொண்டு மக்கள் ஆதரவைப பெற்றது. சிவசேனா எப்படிப்பட்ட வெறித்தனமான கட்சி என்பதெல்லாம் பெரிய வரலாறே இருக்கிறது.
அடுத்து, சரத்பவார் என்கிற அரசியல் ஜாம்பவானின் NCP யை உடைத்து, உடைத்தெடுத்தப் பிரிவை உடன் வைத்து, மக்கள் ஆதரவைப் பெற்றது. இப்படி பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவே சில்லு சில்லாய் சிதறடிக்கப்பட்டார். சரத்பவாரே பவரில்லாமல் ஆக்கப்பட்டார். மொத்தமும் பிஜேபியின் அரசியல் அராஜக விளையாட்டு.
பிஜேபியின் முன்னேற்றமே அடுத்தக் கட்சியை அழித்து, அதிலிருப்பவர்களை வலுக்கட்டாயமாய் பிஜேபிக்கு மாற்றி, அதன் மூலம் ஆதாயமடைவது தான். அந்தக் கட்சிக்கு தெரிஞ்சதே இந்த ஃபார்முலா தான்.
நிற்க...!
இந்த பிஜேபி தான், இதே பிஜேபி தான், இந்தத் தமிழ்நாட்டிலும், இப்படித்தான், அண்ணாதிமுகவை மொத்தமாக அழித்துவிடத் துடித்தது, பன்னீர்செல்வத்தைப் பயன்படுத்தியது, தினகரனை திசைமாற்றி வைத்துக் கொண்டது. அரசியல் சித்து விளையாட்டுக்கள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தியது.
ஆனால், தோற்றுப்போனது. எஸ், அண்ணாதிமுகவை தொட்டுப் பார்க்கக் கூட முடியாமல் தோற்றேப்போனது.
யாரிடம்...?
என் தலைவன் எடப்பாடியாரிடம். ஏனெனக்குத் தலைவனானார் எடப்பாடியார் என்பதன் காரணமும் இஃதே தான். அசாத்தியத் துணிச்சல்காரன்.. அவர் அண்ணாதிமுக தொண்டன் டா.. தொட முடியுமா..? கிளையிலிருந்து முளைத்தவர். அடிபட்டு, சிறைபட்டு, ரத்தக்கறைபட்டு, வலுவான கட்சிப் பற்றுடன் வாழ்வைத் தொடங்கியவர். யாருகிட்ட..?
அண்ணா திமுகவை தொட்டுப் பார்க்க நினைத்தாலே விட்டுவிடாதவர், அழித்துவிடவே நினைத்தக் கும்பலை விட்டுவிடுவாரா..?
தலைவா...
தடம் போடு..
தம்பிகள்
தடம் பிறளாமல் பின்தொடர்கிறோம்..!
தலைவா...தலையே... நீ.. வா..'' என கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி தொடர்ந்தது. அதன்பிறகு சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications