"கவிழும் மகாராஷ்டிரா பாஜக அரசு?" கூட்டணிக்குள் வெடித்த மிக பெரிய மோதல்.. அடுத்த ட்விஸ்ட் ரெடி
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி இடையேயான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே அங்கு பாஜக கூட்டணி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அஜித் பவார் தரப்பு என்சிபி தலைவர்கள் கூட்டணி குறித்து அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி கூட்டணி ஆட்சி இருக்கும் நிலையில், அங்கு சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இருப்பினும், அங்குத் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது போலவே தெரிகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பாகவே பாஜக கூட்டணி கவிழும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
அமோல் மிட்காரி: இது தொடர்பாகக் கூட்டணியில் உள்ள அஜித் பவார் தரப்பு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதாவது நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் உரிய இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இல்லை என்றால் கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாகவே போட்டியிட நேரிடும் என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அமோல் மிட்காரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மிட்காரி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இப்போது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் என்சிபி ஆகியோர் ஆட்சியில் உள்ளனர். கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் 100 இடங்களைக் கேட்டால் அது நடைமுறைக்குச் சாத்தியமே இல்லாதது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் அமோல் மிட்காரி தெரிவித்துள்ளார்.
ஏற்கவே முடியாது: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "வரும் சட்டசபைத் தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தினால் என்ன செய்ய முடியும்.. வேறு வழியில்லை.. தனியாகவே போட்டியிட வேண்டும். மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில், 55 இடங்களை மட்டுமே வழங்குவதை ஏற்கவே முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக: மகாராஷ்டிராவில் இந்தாண்டு நடக்கும் தேர்தலில் அஜித் பவாரின் என்சிபி கட்சிக்கு 55 இடங்களை மட்டுமே பாஜக ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. 55 இடங்கள் போதாது என்றே அமோல் மிட்காரி அதிருப்தி தெரிவித்துள்ளார். பாஜக இந்த 55 சீட்களை ஒதுக்க முன்வந்துள்ளதாக வெளியான தகவல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்ற போதிலும், அமோல் மிட்காரி பேச்சு அதையே குறிப்பதாக இருக்கிறது.
இதற்கிடையே அமோல் மிட்காரியின் பேச்சுக்கு பாஜக சட்டசபை கட்சித் தலைவர் பிரவின் தரேகர் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "மித்காரி பேச்சுக்குக் கட்சியின் மூத்த தலைவர்கள் விளக்கமளிக்க வேண்டும். இது போன்ற கருத்துகளைக் கூற மித்காரிக்கு அதிகாரம் உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். சீட் பங்கீடு பேச்சுவார்த்தைகள் உயர்மட்ட தலைவர்கள் இடையே நடைபெறும். அதைப் பொதுவெளியில் பேசுவது சரியான நடைமுறை இல்லை" என்றார்.
கூட்டணியில் பூசல்கள்: மகாராஷ்டிராவில் உள்ள கூட்டணியில் பூசல்கள் எழுந்துவிட்டது போலவே தெரிகிறது. மேலும், மிட்காரி இதுபோல கருத்துகளைக் கூறுவதது இது முதல்முறை இல்லை. அவர் கடந்த சில காலமாகவே பாஜகவைத் தொடர்ந்து விமர்சித்தே வருகிறார். புனே போர்ஷே கார் விபத்தில் என்சிபி தலைவர்களின் தலையீடு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அதற்குப் பதிலடி கொடுத்த மிட்காரி பாஜகவின் சந்திரகாந்த் பாட்டீல் புனே மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தபோதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக மிட்காரி கூறியிருந்தார்.
அப்போதே மிட்காரியின் கருத்துகளை மறுத்த பாஜக, கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மிட்காரி பேசி வருவதாகவும் அவர் கட்சித் தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications