மாத சம்பளம் ரூ.13000 தான்! ஆனா காதலிக்கு சொகுசு கார் வாங்கி தந்த இளைஞன்! அது எப்படி? அதிர்ந்த போலீஸ்
மும்பை: மகாராஷ்டிராவில் மாதம் வெறும் ரூ.13.000 சம்பளத்தில் வேலை செய்து வந்த இளைஞர், நுட்ப மோசடி செய்து ரூ.21 கோடியைக் கொள்ளையடித்துள்ளார். இந்தப் பணத்தை வைத்து அவர் பல சொகுசு கார்கள், பைக்குகளை வாங்கியது மட்டுமின்றி தனது காதலிக்கும் முக்கியமான இடத்தில் 4 BHK பிளாட் ஒன்றை வாங்கி பரிசாகக் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி கூட மோசடி செய்ய முடியுமா என நாம் யோசிக்கும் அளவுக்குப் பல வினோத மோசடி சம்பவங்கள் இந்தியாவில் நடக்கத் தொடங்கியுள்ளது. அதில் பல சம்பவங்கள் நமக்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.

மாபெரும் மோசடி:
இங்கு மகாராஷ்டிராவில் உள்ள அரசுக்குச் சொந்தமான விளையாட்டு வளாகத்தில் மாதம் ரூ.13,000 சம்பளத்திற்கு வேலை செய்து வரும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவர், ரூ.21 கோடியை மோசடி செய்துள்ளான். இதை வைத்து தனது காதலிக்குச் சொகுசு கார்கள் மற்றும் 4 பிஎச்கே பிளாட் வாங்கி கொடுத்துள்ளான்.. அவர் எப்படி இதைச் செய்தார் என்பதை நாம் படித்தால் நமக்கே தலை சுற்றுவதாக இருக்கிறது. யார் அவர்.. எப்படி இவ்வளவு பெரிய சம்பவத்தைச் செய்ய முடிந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அதாவது மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர் ஹர்ஷல் குமார் க்ஷிர்சாகர். ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இவரது மாத சம்பளமே வெறும் 13 ஆயிரம் ரூபாய் தான். இப்போது இவர் தலைமறைவாக இருக்கும் நிலையில், இந்த மோசடிக்கு உதவியதாக உடன் வேலை செய்த யசோதா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பி.கே.ஜீவன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் ஷாக்
அந்த விளையாட்டு வளாகத்தின் பழைய லெட்டர்ஹெட் ஒன்றை அவர் எப்படியோ எடுத்துவிட்டார். அதை வைத்து அவர் வங்கிக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார். அதாவது விளையாட்டு வளாகத்தின் மெயில் ஐடியை மாற்றுவதாகவும் வங்கிக் கணக்கிலும் அதை மாற்றுமாறு கோரிக்கை விடுத்து அந்த மெயிலை அவர் அனுப்பியிருக்கிறார்.
அவர் அனுப்பியிருந்த மெயில் ஐடி பார்க்க அப்படியே விளையாட்டு வளாகத்தின் மெயில் ஐடி போல இருந்துள்ளது. ஒரிஜினல் மெயில் ஐடிக்கும் இவர் கொடுத்திருந்த போலி மெயில் ஐடிக்கும் ஒரே ஒரு லெட்டர் மட்டுமே மாறி இருந்தது. இது நிஜமாகவே விளையாட்டு வளாகம் சார்பில் வந்த கோரிக்கை என நினைத்து வங்கி நிர்வாகத்தினரும் மெயில் ஐடியை மாற்றி உள்ளனர்.
என்ன நடந்தது:
இந்த புதிய மெயில் ஐடியை உருவாக்கியதே ஹர்ஷல் குமார் என்பதால் அவரால் அதை ஈஸியாக ஆக்செஸ் செய்ய முடிந்து இருக்கிறது. ஓடிபி எல்லாமே அந்த மெயில் ஐடிக்கு வருவதை உறுதி செய்து கொண்ட ஹர்ஷல் குமார், விளையாட்டு வளாகத்தின் பெயரில் இருக்கும் வங்கிக் கணக்கில் இன்டர்நெட் பேங்க்கிங் வசதியை ஓபன் செய்து இருக்கிறார். அதன் பிறகு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை, அவர் விளையாட்டு வளாகத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.21.6 கோடி பணத்தை 13 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி இருக்கிறார்.
அதை வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ஹர்ஷல் குமார் ரூ.1.2 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார், ரூ.1.3 கோடி மதிப்புள்ள சொகுசு எஸ்யூவி, ரூ.32 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக் என இஷ்டத்திற்கு வாங்கி குவித்துள்ளார். இது மட்டுமின்றி தனது காதலிக்கு மும்பை விமான நிலையத்திற்கு மிக அருகே 4 BHK பிளாட் ஒன்றையும் வாங்கி பரிசாகக் கொடுத்துள்ளார். மேலும், தனது காதலிக்கு வைரம் பதித்த ஒரு ஜோடி கண்ணாடியையும் ஆர்டர் செய்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
13 வங்கிக்கணக்குகள்:
இந்த மாபெரும் மோசடியில் வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் போலீசார், அந்த 13 வங்கிக்கணக்குகள் யார் பெயரில் உள்ளன என்பது குறித்த ஆவணங்களைச் சேகரித்து வருகின்றனர். ஹர்ஷலை தேடி வரும் போலீசார், சொகுசு கார்களைக் கைப்பற்றினர்.
விளையாட்டு வளாகத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் நிதி முறைகேடுகள் நடந்தது போல தெரிந்ததால் அங்கு வேலை செய்த அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுவரை 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அதில் 2 பேரை கைது செய்துள்ளதாகவும் முக்கிய குற்றவாளியான ஹர்ஷலை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications