அந்த ஒரு நொடி.. வந்ததே கோபம்.. அதிகாரிக்கு அடி, பெண் போலீஸ் முகத்தில் குத்து.. தாய்குலத்தின் ஆவேசம்
மும்பை: யார் வண்டில கை வைக்குற.. இந்தா வாங்கிக்க.. என்று அதிகாரிகளையும், போலீஸ்காரரையும் கும்மாங்குத்து குத்தி தள்ளி சண்டை போட்டுள்ளார் ஒரு பெண்மணி. தனது காய்கறி தள்ளு வண்டியை கீழே தள்ளியதால் கோபமடைந்துதான் தனது விஸ்வரூபத்தை காட்டிவிட்டார் அவர்.
இந்தியாவிலுள்ள பெருநகரங்களிலேயே, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மும்பைதான். எனவே, அங்கு கெடுபிடிகள் மிக அதிகமாக உள்ளன.
இப்படித்தான் தள்ளுவண்டியில் காய்கறி, கீரை போன்றவற்றை விற்பனை செய்ய சென்ற பெண்ணிடமும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை கெடுபிடி காட்டியுள்ளது.

லாரியில் தள்ளுவண்டி
பெரிய லாரியை எடுத்துக் கொண்டு, இப்படியான தள்ளுவண்டிகளை கைப்பற்றி அதில் ஏற்றிச் செல்வதே, இவர்கள் வாடிக்கையாக இருந்தது. இப்படித்தான் பெண்மணி ஒருவர் தள்ளுவண்டியையும் வழிமறித்தனர். அத்தோடு விட்டால் பரவாயில்லை. காய்கறியை இரக்கமின்றி கீழே தள்ளிவிட்டனர். தான் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் வாங்கிய காய்கறியை கண்முன்னாலேயே, இப்படி தூக்கிப் போட்டதை பார்த்ததும், அந்த பெண்ணுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

லத்தியடி
காய்கறியை கீழே தள்ளிய ஆண் முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அவர் செய்வதறியாது நிலைகுலைந்து போனார். இதை பார்த்ததும், அங்கே பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீஸ்காரர் ஒருவர், தள்ளுவண்டி பெண்மணியின் முதுகில் லத்தியால் ஓங்கி அடித்தார். இன்னும் கோபம் தலைக்கேறியது அந்த பெண்ணுக்கு. லத்தியை கண்டு அவர் அஞ்சவில்லை. லத்தியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால், பெண் போலீஸ் கன்னத்தில் ஓங்கி குத்தினார்.

பெரும் கூட்டம்
அந்த பெண் போலீசாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அதற்குள்ளாக அந்த பெண்ணுக்கு ஆதரவாக அவர் குடும்பத்தாரும் வந்து, எதிர்ப்பு குரல் எழுப்பினர். மற்றொரு பக்கம் ஆண் போலீசாரும் சென்று, அந்த பெண் போலீசை விடுவிக்க முயன்றனர். ஒருவழியாக காய்கறி விற்பனை செய்யும் பெண் நகர்த்திச் செல்லப்பட்டார். உடனே, அந்த பெண் போலீஸ், தனது கோபத்தை தீர்க்க அந்த பெண்ணின் முதுகில் திரும்ப திரும்ப ஓங்கி குத்தினார்.

விவிஐபி மகன் கல்யாணம்
இந்த அத்தனை காட்சியும் வீடியோவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோ ஏஎன்ஐ செய்தி நிறுவனம் மூலம் வெளியே வந்துள்ளது. வண்டியை மட்டும் கைப்பற்றியிருக்கலாம், காய்கறியை கீழே தள்ளியிருக்க கூடாது என இதைப் பார்த்த நெட்டிசன்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற அடாவடி மற்றும் கோபத்தை, விவிஐபிகளின் மகன் திருமணம் நடைபெற்றதே, அப்போது காவல்துறை காட்டியிருக்க வேண்டும். அதைவிடுத்து, ஏழை, எளியவர்கள் மீது, காட்டக் கூடாது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட ஒரு இடத்திலும், அந்த பெண் காய்கறி விற்கிறார் என்றால், அவர் எந்த அளவுக்கு, வறுமையில் இருப்பதால் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்பதை யோசிக்க வேண்டாமா. இவ்வாறு கூறுகிறார் இந்த நெட்டிசன்.

இமேஜ் காலி
இது போன்று காய்கறிகளை தூக்கி எறியாமல் கூட அவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். இது மனிதாபிமானமற்றது. மும்பை போலீசுக்கு ஆதரவாக பாலிவுட்டினர் நூற்றுக்கணக்கான பி.ஆர் ட்வீட்டுகளை வெளியிட்டிருந்தாலும், உங்கள் இமேஜை கெடுக்க இதுபோன்ற ஒரு சம்பவம் போதுமானது என்கிறார், இந்த நெட்டிசன்.












Click it and Unblock the Notifications