78 வயதிலும் இந்த குதிரை ஓடும்.. பாஜகவை அசைத்து பார்த்த சரத் பவார்.. தேசியவாத காங்கிரசின் எழுச்சி!
மகாராஷ்டிராவில் தான் ஒரு அசைக்க முடியாத தலைவர் என்பதை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் தான் ஒரு அசைக்க முடியாத தலைவர் என்பதை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 168 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் சிவசேனா 63 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 104 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இதன் மூலம் பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கூட்டணி 91 தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் 52 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. 34 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

தேசியவாத காங்கிரஸ்
இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 30 தொகுதிகளில் கூட வெல்லாது என்றுதான் கணிக்கப்பட்டது. இந்த சட்டசபை தேர்தலோடு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆயுள் முடிந்துவிடும். கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்றுதான் எல்லோரும் கணித்தார்கள்.

மிக மோசம்
2019 லோக்சபா தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மோசமாக தோல்வி அடைந்தது. அதேபோல் சட்டசபை தேர்தலிலும் தேசியவாத காங்கிரஸ் தோல்வி அடையும் என்று எல்லோரும் நினைத்தார்கள். காங்கிரஸ் கட்சியே தேசியவாத காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்க யோசித்துக் கொண்டுதான் இருந்தது.

அரசியல் வல்லுநர்கள்
அரசியல் வல்லுனர்களும் கூட, சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை அரசியல் ரேஸில் வைக்கவே இல்லை. ஆனால் அதை எல்லாம் சரத் பவார் பொய் என்று நிரூபித்து 50+ இடங்களில் முன்னிலை வகிக்கிறார். 1999ல் தொடங்கி இன்று வரை 20 வருடத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு முறை கூட 40 தொகுதிக்கும் குறைவாக வென்றது கிடையாது. இந்த முறையும் அது நிரூபணம் ஆகி உள்ளது.

மகாராஷ்டிரா எப்படி
மகாராஷ்டிராவின் தனிப்பெரும் தலைவராக சரத்பவார் தற்போதும் வலம் வருகிறார் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பிரிந்து 1999ல் தேசியவாத காங்கிரஸ் தொடங்கப்பட்டது. அப்போதில் இருந்தே மகாராஷ்டிராவில் அக்கட்சி மிகவும் வலுவான கட்சியாக இருந்துள்ளது. எல்லாவிதமான அரசியல் மாற்றங்களையும் சமாளித்து அக்கட்சியை வேகமாக சரத்பவார் வளர்த்தெடுத்தார்.

மோடி அலை
மோடி அலை இருந்த போது கூட 2014ல் சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 41 இடங்களில் வென்றது. இந்தமுறை அதைவிட குறைவான இடங்களில் வெல்லும் என்றுதான் கணித்தார்கள். ஆனால் கணிப்புகளை எல்லா தவிடுபொடியாக்கி தற்போது சரத் பவார் தன்னுடைய பவரை நிரூபித்துள்ளார்.

அடிப்படை விஷயம்
காங்கிரஸ் கட்சி சரியாக ஒத்துழைக்காத போதும் கூட, 78 வயதில் சரத் பவார், வென்று காட்டி இருக்கிறார். அரசியலில் அடிப்படை விஷயங்களில் சரியாக செய்தால் முடிவும் சரியாக வரும் என்பார்கள். அதற்கு உதாரணமாக தற்போது சரத் பவார் திகழ்கிறார். இந்த குதிரை எந்த வயதிலும் ஓடும் என்பதை சரத் பவார் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.












Click it and Unblock the Notifications