அண்ணன் எம்எல்ஏ ஆனால்.. மகாராஷ்டிராவையே மிரள வைத்த வாக்குறுதி.. 90ஸ் கிட்ஸ் இளைஞர்கள் குஷி
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் தனது தொகுதியில் திருமணம் ஆகாத இளைஞர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சி பர்லி தொகுதி வேட்பாளர் ராஜேசாகேப் தேஷ்முக் வாக்குறுதி அளித்துள்ளார். இவரது வித்தியாசமான இந்த வாக்குறுதி தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது. ஏனெனில் சரியான வேலை கிடைக்காத காரணத்தால், திருமணம் செய்து கொள்ள முடியாமல் பலர் தவித்து வருகிறார்கள்.
90களில் பிறந்த பலருக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை.. முறையான வேலை இல்லாதது முதல் காரணமாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக மக்கள் தொகை கட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் பாலின விகிதத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. பல்வேறு சாதிகளில் திருமண வயதில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே வயது வித்தியாசம் 10 வயது வரை கூட சர்வ சாதாரணமாக உள்ளது.

அதேபோல் பெண்களில் பலர் பட்டப்படிப்பு வரை படித்துவிட்டதால், நல்ல வேலைக்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் நன்கு படித்த, வேலையில் உள்ள அல்லது வாழ்க்கையில் செட்டில் ஆன மணமகன்களை எதிர்பார்ப்பதால், குறைந்த ஊதியம் பெறும், சரியாக படிக்காதவர்களுக்கு திருமணம் செய்வதற்கு பெண் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக மாறிவருகிறது. அதேபோல் என்னதான் படித்து, நன்கு வேலையில் இருந்தாலும், வயதை காரணம் காட்டி மாப்பிள்ளையை நிராகரிப்பது அதிகமாக உள்ளது.
அதேபோல் வயது குறைவாக இருந்தாலும், நன்கு படித்து, அதிக சம்பளத்துடன் செட்டில் ஆகி இருந்தாலும் அழகாக இல்லை என்று மணமகனை நிராகரிப்பதும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களில் பெரும் சிக்கலாக மாறி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் நிலைமை சிக்கலாகி வருகிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்காத காரணத்தால் திருமணம் ஆகவில்லை.. திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அது போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு வருகிற 13 மற்றும் 20-ந்தேதி 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. இந்த பிரச்சாரத்தில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த நிலையில் தான் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் தனது தொகுதியில் திருமணம் ஆகாத இளைஞர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சி பர்லி தொகுதி வேட்பாளர் ராஜேசாகேப் தேஷ்முக் வாக்குறுதி தந்துள்ளார்.
இவரது வித்தியாசமான இந்த வாக்குறுதி தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) செய்தித் தொடர்பாளர் அங்குஷ் காக்டே, மராத்வாடாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் கிட்டத்தட்ட பூஜ்யமாக உள்ளது. இதனால் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஒரு சமூகப்பிரச்சனையாக மாறி உள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications