2 வந்தே பாரத் ரயில்களை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. இஸ்லாமிய நிகழ்விலும் பங்கேற்பு
வந்தே பாரத் ரயில்களை இன்றைய தினம் மும்பையில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
மும்பை: புதிய வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மும்பை வருகிறார்... மேலும் அவர் இஸ்லாமிய நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்... பிரதமரின் வருகையையடுத்து, மும்பையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 8 அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் ஓடுகின்றன... இதில் முதல் ரெயில் சேவை தலைநகர் டெல்லி- வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.
இந்தநிலையில் புதிதாக 2 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி மும்பையில் நடைபெறும் விழாவில் இன்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமர்
இதற்காக மும்பைக்கு இன்று வருகை தர உள்ளார் பிரதமர் மோடி.. பிற்பகல் 2.45 மணியளவில் சிஎஸ்எம்டி ரெயில் நிலையம் 18-வது பிளாட்பாரத்தில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்... இந்த ரெயில்கள் மராட்டிய மாநிலத்துக்குள்ளே இயக்கப்படுகிறது... அதாவது மாநில தலைநகர் மும்பையில் இருந்து புனித ஸ்தலமாக கருதப்படும் ஷீரடிக்கும் (339 கி.மீ), மும்பையில் இருந்து சோலாப்பூருக்கும் (452 கி.மீ.) இயக்கப்பட உள்ளது... இதைதவிர, சாந்தாகுருஸ்-செம்பூர் லிங்ரோடு, குரார் சுரங்க பாதையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

ரெயில்வே அமைச்சகம்
இதன்மூலம் மகாராஷ்டிராவில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 4 ஆக உயர போகிறது.. புதிய இந்தியாவுக்கான சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இது ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்திருக்கிறது... மும்பை-சாய்நாதர் ஷிர்டி வந்தே பாரத் ரயில், நாட்டின் 10-வது வந்தே பாரத் ரயிலாகும். இது மகாராஷ்ட்ராவில், நாசிக், திரிம்பகேஸ்வர், சாய்நகர் ஷிர்டி, ஷனி சிங்கனாப்பூர் ஆகிய முக்கிய யாத்திரை மையங்களின் போக்குவரத்தை இணைக்கும்.

மகாராஷ்டிரா
அதேபோல, இன்று மாலை 4.30 மணியளவில் இஸ்லாமிய நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்கிறார்.. மும்பை அந்தேரி மரோல் பகுதியில் தாவூதி போக்ரா இஸ்லாமியர்களின் அல்ஜாமியா-தஸ்-சபியா கல்வி நிறுவனத்தின் புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார்...மரோலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.. பிரதமர் மோடியின் வருகையையொட்டி மும்பையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது... அதேபோல, சிஎஸ்எம்டி, அந்தேரி பகுதிகளில் டிரோன் போன்ற குட்டிவிமானங்கள் பறக்கவிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

உ.பி. 2.0
முன்னதாக, உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் பிரதமர்.. காலை 10 மணியளவில் லக்னோவில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, உலகளாவிய வர்த்தகக் கண்காட்சி மற்றும் முதலீட்டாளர்களுக்கான இன்வெஸ்ட் உ.பி. 2.0 என்ற அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்... உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நாளை தொடங்கி 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications