இரவோடு இரவாக ராகுல் காந்திக்கு பறந்த போன் கால்.. 24 மணி நேரத்தில் மொத்தமாக மாறிய மகாராஷ்டிர அரசியல்!
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. அங்கு அடுத்த மாதம் மும்பையில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் சூழலில் தேர்தல் களம் மொத்தமாக மாறி வருகிறது. இது தொடர்பாக ராகுல் காந்தி வரை விஷயம் சென்றுள்ளதாம். இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி கூட்டணியில் மாற்றம் வரும் எனச் சொல்லப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் மிகப் பெரிய மாற்றம் நடந்துள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானது. இந்தத் தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு உற்சாகத்தை அளிப்பதாக இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகளும் தங்கள் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை உணர்த்தியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு முன்பு வரை, மும்பையில் அடுத்த மாதம் நடக்கும் மாநகராட்சி தேர்தலில் தனித்தே போட்டியிடப் போவதாக தாக்ரே சிவசேனாவும் காங்கிரஸும் கூறி வந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் நிலைமையை மொத்தமாக மாற்றிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் தான் அதிக இடங்களில் வென்றிருந்தது. காங்கிரஸ் வாக்குகள் இல்லாமல் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்த தாக்கரே தரப்பு, மீண்டும் காங்கிரஸை அணுகியுள்ளதாம்.
ராகுல் காந்திக்கு போன்
உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் இது தொடர்பாக நேரடியாக ராகுல் காந்தியுடன் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உரையாடலின்போது, பாஜகவுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்து போட்டியிட வேண்டும் என்றும் அப்போது தான் பாஜகவைத் தோற்கடிக்க முடியும் என ராகுலிடம் சஞ்சய் ராவத் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த அணுகுமுறை சிவசேனாவின் நிலைப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு வரை தாக்கரே சிவசேனாவும் சரி, காங்கிரஸும் சரி தனித்துப் போட்டியிடுவதாகவே சொல்லி வந்தது. இதே சஞ்சய் ராவத் கூட, "யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம்.. அப்படி யாரும் வரவில்லை என்றாலும் நாங்கள் தனியாகப் போராடுவோம்" என்று கூறியிருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் நிலைமையை மொத்தமாக மாற்றியுள்ளது.
மும்பை
ஏனென்றால் சிவசேனா பிரிவதற்கு முன்பு வரை சுமார் 25 ஆண்டுகள் அவர்கள் வசம் மும்பை மாநகராட்சி இருந்தது. அங்கு மும்பையை பவர் யாரிடம் இருக்கிறதோ.. அவர்கள் வசமே மாநிலத்தின் கண்ட்ரோலும் இருக்கும். இதன் காரணமாகவே தாக்கரே தரப்பு மும்பைக்கு முக்கியத்துவம் தருகிறது. இதுவே ஷிண்டே தரப்பிற்கு எதிரான தங்கள் கடைசி முயற்சியாக தாக்கரே பார்க்கிறது. மறுபுறம் தாக்கரே தரப்பு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே பாஜக விரும்புகிறது. இதுவே மும்பை மாநகராட்சி தேர்தலைப் போராட்டக் களமாக மாற்றியுள்ளது.
அங்கு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இடையே பல காலமாகவே மோதல் இருந்தது. சமீபத்தில் இருவரும் இணைந்தனர். அவர்கள் ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால், ராஜ் தாக்கரேவை சேர்பது காங்கிரஸுக்கு விருப்பம் இல்லை. ஏனென்றால் ராஜ் தாக்கரே தரப்பு மராத்தி அடிப்படைவாதத்தைக் கொண்டே அரசியல் செய்கிறது. இதனால் ராஜ் தாக்கரே வந்தால் முஸ்லிம் மற்றும் வட இந்தியர்கள் வாக்கு கிடைக்காது எனக் காங்கிரஸ் அஞ்சுகிறது.
தயக்கம் ஏன்
காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் பிரிவினரே எப்போதும் வாக்களித்து வந்துள்ளனர். மேலும், மும்பை பகுதியில் சமீபத்திய ஆண்டுகளில் மராத்தி வாக்காளர்களின் விகிதம் குறைந்துள்ளது. இதனால் சிறுபான்மை சமூகங்களின் ஆதரவு வெற்றிக்கு அத்தியாவசியமாகிறது. அப்படியிருக்கும் போது ராஜ் தாக்கரே கூட்டணிக்குள் வருவது சிறுபான்மையினர் வாக்குகளைப் பாதிக்கும் என்பதாலேயே காங்கிரஸ் தயங்குகிறது. இந்த அடிப்படை முரண்பாடு காரணமாகவே இரு தரப்பும் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டிருந்தது.
ஆனால், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தனித்துப் போட்டியிடுவது எந்தளவுக்கு மோசமான முடிவு என்பதை எதிர்க்கட்சிகளுக்கு உணர்ந்துவிட்டன. இதன் காரணமாகவே அங்கு அரசியல் சூழல் மாற ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications