ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்! காரில் இருந்து ஒரே ஜம்ப்! நடந்தே சென்று விஸ்வாசத்தை காட்டிய சிவசேனா எம்எல்ஏ
மும்பை: மகாராஷ்டிராவில் அமைச்சர் ஷிண்டே உடன் சில எம்எல்ஏக்கள் மாயமாகி உள்ள நிலையில், அங்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அரங்கேறி வருகிறது.
Recommended Video
மகாராஷ்டிராவில் நேற்று முதலே பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. சுமார் 3 ஆண்டுகளாகச் சுமுகமாகச் சென்று கொண்டிருந்த சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டது.
கடந்த மாதம் நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலிலும், சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிர மேல் சபை தேர்தலிலும் சில சிவசேனா உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தால், அக்கட்சி கூடுதல் இடத்தில் வென்றது.

அமைச்சர் ஷிண்டே
இந்தச் சூழலில் நேற்றைய தினம் அம்மாநிலத்தின் முக்கிய சிவசேனா தலைவர்களில் ஒருவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே திடீரென மாயமானார். அவருடன் சேர்ந்து மேலும் பல எம்எல்ஏக்களும் மாயமானதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் முதலில் குஜராத்தில் உள்ள சூரத்திற்கும், அதன் பின்னர் அசாம் மாநிலத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாயம்
முதலில் 15 முதல் 20 எம்எல்ஏக்கள் ஷிண்டே உடன் சென்றதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே தனக்கு 46 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், பால் தாக்ரேவின் இந்துத்துவ கொள்கைகளை ஒருபோதும் விட்டுத் தர மாட்டேன் என்றும் கட்சியை உடைக்கும் எண்ணம் இல்லை என்றும் ஷிண்டே கூறி இருந்தார்.

தப்பி வந்த எம்எல்ஏ
அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் இன்று இரண்டாவது நாளாகத் தொடரும் நிலையில், தங்கள் எம்எல்ஏக்களை பாஜக கடத்திச் சென்றுள்ளதாக சிவசேனா பகீர் குற்றச்சாட்டைச் சுமத்தியது. இப்படிப்பட்ட சூழலில் தான், மாயமானதாகக் கருதப்பட்ட நிதின் தேஷ்முக், தன்னை கடத்தியதாகவும் உத்தவ் தாக்ரேவுக்கு தான் ஆதரவு என்றும் கூறி உள்ளார். இந்நிலையில், மற்றொரு எம்எல்ஏ தான் எப்படித் தப்பி வந்தேன் என்ற அனுபவத்தைப் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பகிர்ந்துள்ளார்.

குஜராத்தை நோக்கி சென்ற கார்
ஷிண்டே ஆதரவாளராகக் கருதப்பட்ட அந்த எம்எல்ஏ சூரத் சென்றதாகக் கருதப்பட்ட நிலையில், இப்போது அவர் மகாராஷ்டிரா திரும்பி உள்ளார். தனது பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனை உடன் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஷிண்டே நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி மொத்தம் ஆறு எம்எல்ஏக்களை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர்களின் கார்கள் வரிசையாய் விரார் வழியாகக் குஜராத் எல்லைக்குச் சென்றதால் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஒரே ஜம்ப்
கார் சோதனை சாவடியை நெருங்கிய போது, அதன் வேகத்தை ஓட்டுநர் குறைத்துள்ளார். அப்போது அது தான் சரியான நேரம் என்று உணர்ந்து கொண்ட அந்த எம்எல்ஏ, காரில் இருந்து வெளியே குதித்துள்ளார். மேலும், அங்கு இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சிறிது தூரம் வந்துள்ளார். அதன் பின்னர் மகாராஷ்டிராவை நோக்கி நான்கு கிலோமீட்டர் பொடி நடையாகவே நடந்து வந்துள்ளார். இன்று அதிகாலை டிரக் ஏறி தஹிசரை அடைந்த அவர், அவசர அவசரமாக முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டிற்கு விரைந்துள்ளார்.

சிவசேனா விளக்கம்
அப்போது தான் எம்எல்ஏக்கள் எப்படி ஏமாற்றப்பட்டு குஜராத்திற்குக் கொண்டு செல்லப்பட்டோம் என்பதை அவர் சிவசேனா தலைமையிடம் விவரித்துள்ளார். அதன் பின்னர் சிவசேனா தலைவர்கள் தங்கள் எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டதாகக் கூற தொடங்கினர். இப்போது வரை சிவசேனா தங்கள் எம்எல்ஏக்கள் திரும்பி வந்துவிடுவார்கள் என்றே கூறி வருவதற்கும் காரணம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

காரணம் என்ன
கடந்த சில மாதங்களாகவே சிவசேனா தலைமை தன்னை ஒதுக்குவதாக ஷிண்டே கருதி உள்ளார். சிவசேனா தலைமை மீது இருந்து அதிருப்தி காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிவசேனா பாஜக உடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications