தப்புமா ‛இந்தியா’ கூட்டணி? பாஜகவோடு இணைய நச்சரிக்கும் நலவிரும்பிகள்! சரத்பவார் புதுகுண்டு! ட்விஸ்ட்
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்ளார். இவர் மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவாரை ரகசியமாக சந்தித்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க சில நலன்விரும்பிகள் வலியுறுத்த முயற்சிக்கின்றனர் என புதுக்குண்டை தூக்கி போட்டுள்ளார். இதனால் ‛‛இந்தியா'' கூட்டணி தப்புமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு சரத்பவாரே தனது பதிலால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. ஆனால் பாஜகவின் வெற்றியை தடுத்து மத்தியில் கூட்டணி ஆட்சியை கொண்டு வரும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, சமாஜ்வாதி, ஆம்ஆத்மி உள்பட மொத்தம் 26 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த எதிர்க்கட்சிகள் 2 முறை ஆலோசனைகள் நடத்தி உள்ளன.
முதல் கூட்டம் பாட்னாவிலும், 2வது கூட்டம் பெங்களூரிலும் நடந்துள்ளது. பெங்களூரில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லாலு பிரசாத் ராஷ்டிரிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,மனிதநேய மக்கள் கட்சி உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛‛இந்தியா'' என்ற கூட்டணியை உருவாக்கின.
இந்த கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மற்றும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர். இந்தியாவை பொறுத்தமட்டில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளாது என பாஜக நினைத்து இருந்தது. ஆனால் தற்போது அது பாஜகவுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளது.
தங்களுக்குள் பல முரண்பாடுகள் இருந்தாலும் கூட தற்போது 26 கட்சிகளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் எனும் ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்துள்ளன. இந்நிலையில் தான் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் அனைவரும் ‛‛இந்தியா'' கூட்டணியில் உள்ள கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஊழல்வாதிகள், சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளனர் என கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை மட்டும் பாஜக விமர்சிக்காமல் தவிர்த்து வருகிறது. இது சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
அதாவது சரத்பவாரின் கட்சியில் இருந்த அண்ணன் மகன் அஜித் பவார் சமீபத்தில் பாஜக கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிரா துணை முதல்வராகி உள்ளார். இது ஒருபுறம் இருக்க பிரதர் மோடியுடன் சமீபத்தில் சரத்பவார் புனேயில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார். அதன்பிறகு பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என பேசியிருந்தார். இதனால் ‛‛இந்தியா'' கூட்டணியில் உள்ள சரத்பவாருக்கு பாஜக வலைவீசுவதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க புனேவில் அஜித் பவாரை, சரத் பவார் ரகசியமாக சந்தித்த தகவல் வெளியானது. இதனால் அஜித் பவார் மூலம் ‛‛இந்தியா'' கூட்டணியில் இருந்து சரத் பவாரை பிரிக்கும் முயற்சிகளை பாஜக தொடங்கியிருப்பதாக தகவல்கள் வேகமாக பரவின. இந்நிலையில் தான் இந்த விவகாரங்கள் குறித்து இன்று சரத் பவார் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர் பாஜகவுடன் கூட்டணி தொடர்பான முக்கிய தகவலை தெரிவித்தார். இதுபற்றி சரத் பவார் கூறுகையில், ‛‛தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தவைர் என்ற முறையில் எனது கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்பதை நான் தெளிவுப்படுத்துகிறேன். பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்பது எங்களின் கட்சி கொள்கைக்கு பொருந்தாது. எங்கள் கட்சியில் சிலர் (அஜித் பவார் தலைமையிலான அணி) மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.இதனால் எங்களின் கொள்கை முடிவுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா? என சில நலம் விரும்பிகள் நினைப்பதோடு, பாஜகவில் இணைய வைக்க முயற்சிக்கின்றன. இதனை அவர்களுடன் சுமூகமான முறையில் விவாதிக்க முயற்சிக்கிறேன்'' என்றார்.
இந்த வேளையில் அஜித் பவார் உடனான சந்திப்பு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு சரத்பவார், ‛‛அஜித் பவார் எனது அண்ணன் மகன். அவருடனான சந்திப்பு என்பது ரகசியமானது அல்ல. குடும்பம் விஷயம் சார்ந்தது. குடும்பத்தில் உள்ளவரை சந்திப்பதில் தவறேதும் இல்லையே'' எனக்கூறினார். சரத்பவாரின் இந்த பதிலால் ‛‛இந்தியா'' கூட்டணி கட்சிகள் நிம்மதியடைந்துள்ளனர். இருப்பினும் கூட அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அரசியல் அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications