பயம் காட்டிய “பைரேட்ஸ்”.. இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்கு! தமிழக மீனவர்களை தாக்கியதால் ஆக்சன்
நாகை: நேற்று வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
நாகப்பட்டினம், ராமேஸ்வரம், புதுக்கோட்டை, மயிலாடுதுரை, மாவட்ட மீனவர்களுக்கு வங்கக்கடலில் மீன்பிடிப்பதே வாழ்வாதாரமாக இருக்கிறது. கோடிக்கணக்கானோர் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். ஆனால், இலங்கை கடற்படை கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் மீது பல ஆண்டுகளாக நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, வலைகள், படகுகளை சேதப்படுத்துவது, கைது செய்வது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்ற அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கோடியக்கரை அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சத்யராஜ், வேல்முருகன், கோடிலிங்கம், மணியன் ஆகிய 4 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மேலும், தமிழக மீனவர்கள் வைத்து இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் மற்றும் கருவிகளையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்று உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 முறை தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடல்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தடை காலம் முடிந்து தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு சென்றதில் இருந்தே இலங்கை கடற்படையும், இலங்கை கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரமும் இலங்கை கடற்கொள்ளையர்கள் இதேபோல் நாகையை சேர்ந்த மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை திருடிச் சென்றனர். ஒரு வாரம் முன்பாக இலங்கை கடற்படை ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களை விரட்டி அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications