அதிமுக கூட்டணியை கண்டு ஸ்டாலின் புலம்பல்… ஜெ. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தளவாய் சுந்தரம் பேச்சு
Recommended Video

நாகர்கோவில்:அதிமுக அமைத்துள்ள கூட்டணியை கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் புலம்பி கொண்டு உள்ளார் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறியிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: அதிமுக அமைத்துள்ள கூட்டணியால் அதிமுகவின் கொள்கை பெருமை எழுபது சதவீதம் உயர்ந்து உள்ளது. அதிமுக அமைத்துள்ள கூட்டணியை கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் புலம்பி கொண்டு பைத்தியம பிடித்தது போல் உள்ளார்.
திமுக கூட்டணியை கண்டு ரஜினிகாந்த் நாசூக்காக வாழ்த்து கூறிவிட்டு விலகினார். வாரிசு அரசியலுடன் தனக்கு கூட்டணி வேண்டாம் என கமலஹாசன் கூறியிருக்கிறார்.
ஸ்டாலினாவது அவரது கட்சிக்காக மிசாவை சந்தித்து உள்ளார். ஆனால் அவரது மகன் உதயநிதி சினிமாவில் நடிகைகளை மட்டுமே சந்தித்து உள்ளார். உதயநிதிக்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம் என்பது தெரியவில்லை.
ஜெயலலிதாவின் பெயர் மக்கள் மனதில் எப்படி நிலை நின்றதோ அதே போன்று தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மக்கள் மனதில் நிலை நிற்கிறது. அதிமுக இயக்கம் அழிந்து விடும் ஆட்சி கவிழ்ந்து விடும் என கனவு கண்டார்கள்.
ஜெயலலிதா ஆசியுடன் நூற்றாண்டுகளை கடந்தாலும் அதிமுக ஆட்சி செய்யும். அதிமுக அமைத்துள்ள கூட்டணி நாட்டின் நலனுக்கான கூட்டணி நாட்டிற்கு சேவை செய்யும் கூட்டணி என்று கூறினார்.












Click it and Unblock the Notifications