திருமண விழாவை தவிர்த்த முதல்வர் ஸ்டாலின்! மகன் கல்யாணத்தில் வாடிய முகத்துடன் நின்ற மாஜி அமைச்சர்!
நாகர்கோவில்: திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் இல்ல மணவிழாவில் கலந்துகொள்வதை முதலமைச்சர் ஸ்டாலின் தவிர்த்திருப்பதன் மூலம், இன்னும் அவர் மீதான கோபம் தீரவில்லை என்பதை உணர்த்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தனது மகன் திருமணத்தை நடத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் வருகை தராததால் சிரிப்பின்றி வாடிய முகத்துடன் திருமண விழாவில் காணப்பட்டார் சுரேஷ்ராஜன்.
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும், கிருத்திகா உதயநிதியும் சுரேஷ்ராஜன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்ட திமுகவின் முக்கிய முகமாக திகழும் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனின் மகன் திருமண விழா நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டி பல மாதங்களாக அலைந்து திரிந்து அவரிடம் தேதி கேட்டு வாங்கியிருந்தார் சுரேஷ்ராஜன். ஆனால் அதற்குள் விளையாடிய விதியால் அவரிடமிருந்த கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மறைமுகத் தேர்தல் தொடர்பாக எழுந்த புகாரால் சுரேஷ்ராஜன் மீது சினம் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இத்தனைக்கும் சுரேஷ்ராஜன் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர். அப்படியிருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுத்து அனைவரையும் திரும்பிபார்க்க வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் செல்லவில்லை
மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமண விழாவுக்கு தேதி கொடுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் சுரேஷ்ராஜன் இல்ல திருமண விழாவுக்கு செல்லவில்லை. அதேவேலையில் சென்னை திருவான்மியூரில் பொன்.குமார் இல்ல மண விழாவில் கலந்துகொண்டார். இதன் மூலம் சுரேஷ்ராஜன் மீதான முதலமைச்சர் ஸ்டாலினின் கோபம் இன்னும் தணியவில்லை எனத் தெரிகிறது. முதல்வர் வருகை தராததால் சுரேஷ்ராஜன் முகத்தில் சிரிப்பை பார்க்கமுடியவில்லை என்கிறார்கள் அந்த திருமணத்தில் பங்கேற்றவர்கள்.

துர்கா ஸ்டாலின்
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும், அவரது மருமகள் கிருத்திகா உதயநிதியும் சுரேஷ்ராஜன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டதுடன் மணமக்களுக்கு மாலையும், தாலியும் எடுத்துக்கொடுத்து வாழ்த்தினர். என்னதான் சுரேஷ்ராஜன் மீது கோபம் இருந்தாலும் கூட மணமக்களை வாழ்த்த முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவிலுக்கு ஒரு விசிட் அடிக்கவும் வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications