ஏய்.. என்ன கேட்டுட்டே இருக்க? அண்ணாமலையிடம் கேள்வி கேட்ட செய்தியாளரை.. பிடித்து தாக்கிய பாஜகவினர்!
நாமக்கல்: நாமக்கல்லில் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது, பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடியின் சென்னை வருகையின் போது , அவரை வரவேற்க சாலை நடுவில் பாஜக கொடிகளை நட்டது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளிக்காமல்... அண்ணாமலை அந்த செய்தியாளர்களை தாக்கி பேசினார்.

அண்ணாமலை
உங்களுக்கு அறிவாலயத்தில் இருந்து வர வேண்டிய 200 ரூபாய் வந்துவிடும் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர் கேள்வி எழுப்ப எழுப்ப.. உங்களுக்கு 1000 ரூபாய் வந்துவிடும்.. 2000 ரூபாய் வந்துவிடும் என்று கூறிக்கொண்டே சென்றார் அண்ணாமலை. அண்ணாமலையின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் பல பத்திரிகையாளர்கள் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்தனர்.

நாமக்கல்
இந்த நிலையில் தற்போது நாமக்கல்லில் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், இதற்கான சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று பாஜக சார்பாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பாஜக சார்பாக அதன் தலைவர் அண்ணாமலை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

என்ன நடந்தது?
கூட்டம் முடித்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார். செய்தியாளர்கள் அவரிடம் பேச முயன்ற போது, அவர்களிடம் பேசாமல், அண்ணாமலை அங்கிருந்து செல்ல முயன்றார். இதையடுத்து தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர்.. ஏன் பேட்டி கொடுக்கவில்லை என்று கேட்டார். அதற்கு அண்ணாமலை பதில் சொல்லாமல் அங்கிருந்து செல்ல முயன்றார். உடனே செய்தியாளர் அண்ணாமலையிடம் தொடர்ந்து கேள்வி எழுப்ப முயன்றார்.

அண்ணாமலை பதில்
இதையடுத்து, உங்கள் நிறுவனத்தில் நான் வேலை செய்யவில்லை என்று கூறிவிட்டு காரில் ஏறி அவ்விடத்தில் இருந்து வேகமாக கிளம்பினார் அண்ணாமலை. இதை பார்த்த பாஜகவினர்.. அந்த செய்தியாளரை பிடித்து இழுத்து வாக்குவாதம் செய்தனர். ஏய் என்ன கேள்வி கேட்டுட்டே இருக்க.. போயா.. கேள்வி கேட்காத என்று அந்த செய்தியாளரை பார்த்து பாஜகவினர் கத்தினர். சில தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினர். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் தடுத்தும் பிரச்சனை நிற்கவில்லை. பாஜகவினர் பலர் கும்பலாக அங்கே கூடினர்.

தாக்குதல்
இதையடுத்து வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. அந்த கேள்வி கேட்ட செய்தியாளரை கழுத்தை பிடித்த பாஜகவினர் சிலர் அவரை தாக்கினர். அவர்களை சில செய்தியாளர்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் உள்ளே புகுந்து அந்த செய்தியாளரை காப்பாற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 45 நாட்களை கடந்த நடந்து வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இதைப்பார்த்து திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

என்ன சொன்னார்?
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 517 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. அதில் 15 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. இதைக்கேட்டால் மத்திய அரசு நிதி வழங்காமல் ஓர வஞ்சனை செய்கிறது என சொல்கின்றனர். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்தாண்டு நான்காண்டு வேகமாக முடிய வேண்டியது தான் என இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நம்பர் ஒன்னாக உள்ளார்.

பரபர சம்பவம்
மத்திய அரசு நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக அமைச்சர்கள் போகமாட்டார்கள். கூட்டம் முடிந்த பின் மத்திய அரசிடம் இருந்து வரும் குறிப்பை எப்படி மாநில அரசு திட்டமாக மாற்றலாம் என ஆலோசனை செய்வர். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் 13 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஒருவர் கூட பதில் கடிதம் எழுதவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பழைய சேகர்பாபுவை பார்க்காதீர்கள் என கூறுகிறார். அதைப்பார்க்கத்தான் பாஜக உள்ளது, என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications