ஸ்டாலின் படத்துடன் திருமண அழைப்பிதழ்... 4 கிராம் தங்ககாசு பரிசு... நாமக்கல் மாவட்ட திமுக
நாமக்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படத்துடன் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் தொண்டர்களுக்கு 4 கிராம் தங்ககாசு பரிசாக வழங்கப்படும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் செயல்படாத மாவட்டச் செயலாளர்களை நீக்கிவிட்டு புதிய முகங்களை மாவட்ட பொறுப்பாளர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்து வருகிறார். அந்த வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக ராஜேஷ்குமார் என்பவர் 10 நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதையடுத்து தொண்டர்களை தன் வசம் இழுக்கும் வகையில் பல புதிய புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ராஜேஷ்குமார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு ஸ்டாலின் படத்துடன் அழைப்பிதழ் அடித்தால் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் 4 கிராம் தங்ககாசு வழங்கப்படும் என பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் கிளைக்கழக நிர்வாகிகள் மரணமடைந்தால் அவர்களின் இறுதிச்சடங்குக்கு தேவையான நிதியை ஒன்றியச் செயலாளர்கள் தர வேண்டும் என்றும், அந்த தொகையை பின்னர் தன்னிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
புதிய பொறுப்பாளர் ராஜேஷ்குமார் அறிவிப்புக்கு நிர்வாகிகள் இடையே பெரும் வரவேற்பு உள்ள நிலையில், அவரது எதிர்தரப்பும் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்தவருமான காந்திசெல்வன் தரப்பு கடும் புகைச்சலில் உள்ளது. இதனிடையே, ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளை முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
மாவட்டச் செயலாளர், மத்திய இணை அமைச்சர் என சகல பதவிகளையும் அனுபவித்த ஒருவர், அடுத்தவருக்கு வழிவிட்டு ஒதுங்குவதற்கு ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார் எனத் தெரியவில்லை என்றும், அவரைத் தவிர யாருமே புதிதாக வளர்ந்து வரக்கூடாது என நினைக்கிறாரா அவர் என காந்திச்செல்வனை விமர்சிக்கின்றனர் நாமக்கல் மாவட்ட உ.பி.க்கள்.












Click it and Unblock the Notifications