பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த 14 வயது மாணவன்! சரமாரியாக சுட்டதில் 4 பேர் பலி! அமெரிக்காவில் ஷாக்
நியூயார்க்: அமெரிக்காவில், 14 வயது மாணவன் பள்ளிக்குள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.
அமெரிக்காவில் ஏறத்தாழ எல்லோரிடமும் துப்பாக்கி இருக்கும். ஒரு ஆய்வில் வெறும் 10 சதவிகிதமானவர்கள் மட்டுமே துப்பாக்கியை வைத்திருப்பதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதிலும், இந்த 10% பேர், துப்பாக்கி உள்ள வீட்டில் வசிக்கிறார்கள். அப்படியெனில் அமெரிக்காவில் துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். அளவுக்கு அதிகமான ஆயுதங்கள் தொடர்ந்து வன்முறையை ஊக்குவித்து வருகின்றன.

துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. நேற்று அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடத்திருக்கிறது. 14 வயது மாணவர் ஒருவர், திடீரென சக மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார். இதில் 2 மாணவர்கள் மீதும், 2 ஆசிரியர்கள் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. இவர்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். அதேபோல, 9 பேர் குண்டு பாய்ந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
14 வயது மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? அதை எப்படி அந்த மாணவரால் இயக்க முடிந்தது? அவருக்கு யார் சொல்லி கொடுத்தது? உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. இந்த மாணவர் கடந்த ஆண்டு, பள்ளிக்கு துப்பாக்கிச்சூடு மிரட்டல் விடுத்திருந்தார். அவரை போலீசார் அழைத்து எச்சரித்திருந்தனர். இப்படி இருக்கையில் இந்த ஆண்டு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இந்த மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டு இது 16ஆக இருந்தது. ஆனால் 2023ல் 57ஆக உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டு இன்றைய தேதி வரை பள்ளிகளில் 46 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த ஆண்டில் இதுவரை நடந்த பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில், 50 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.












Click it and Unblock the Notifications