சீனா எதிர்பார்த்த தருணம்.. டிரம்ப் மட்டும் அப்படி செய்தால்.. அவ்வளவுதான்.. நெருக்கடியில் ஜோ பிடன்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டு, அதன்மூலம் அமெரிக்க அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டால் அது உலக அரசியலையும் பாதிக்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தேர்தல் முடிந்து 12 மணி நேரம் ஆகியும் கூட.. இன்னும் தெளிவான முடிவு வரவில்லை. தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவாகி உள்ளதால் உறுதியான வெற்றியாளரை இன்னும் தேர்வு செய்ய முடியவில்லை.
இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 237 இடங்களில் முன்னிலை வகிக்கிறார். இன்னொரு பக்கம் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 213 இடங்களில் வென்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

என்ன நிலை
இந்த நிலையில் டிரம்ப் இப்போதே தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பேச தொடங்கி உள்ளார். தேர்தல் முடிவுகள் முழுதாக வெளியாகும் முன்பே தான் வெற்றிபெற்றுவிட்டதாக டிரம்ப் அறிவித்துவிட்டார். மீதம் இருக்கும் தபால் வாக்குகளின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இப்போதே அவர் அறிவிக்க தொடங்கி உள்ளார். இதற்கான சட்ட போராட்டத்திற்கும் டிரம்ப் தயாராகி விட்டார்.

மோசம்
இதனால் அமெரிக்க அரசியல் சிவில் வார் நடந்த ஆப்ரஹாம் லிங்கனின் 1861-65 காலத்திற்கு பின் மீண்டும் பதற்றம் அடைந்துள்ளது. சிவில் வாருக்கு பின் இப்போதுதான் அமெரிக்க மாகாணங்கள் இடையே பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவு எதிராக வந்து, அதை டிரம்ப் ஏற்றுக்கொள்ளாமல் போனால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

என்ன நடக்கும்
டிரம்ப் மட்டும் ஏதாவது பிரச்சனை செய்தால், அமெரிக்காவில் உள்நாட்டு குழப்பம் ஏற்படலாம், யார் வெள்ளை மாளிகைக்கு உரிமை கொண்டாடலாம் என்ற நிலை வரலாம், வலது - இடது மோதல் தீவிரம் அடையலாம். முக்கியமாக டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் குதிக்கலாம், முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டங்களில் ஈடுபடலாம்.. இப்படி அமெரிக்காவில் நிறைய குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பிடன்
பிடனும் சண்டைக்கு தயாராகவே இருக்கிறார். இதனால் தேர்தல் முடிவுகள் ஒருவேளை டிரம்பிற்கு எதிராக வந்து.. அதை டிரம்ப் ஏற்றுக்கொள்ளாமல் போனால் அது அமெரிக்காவில் நிலையற்ற தன்மையை உருவாக்கும். அதிலும் கொரோனா காரணமாகவும் , பொருளாதார சரிவு காரணமாகவும் பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்கா..மேலும் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.

சீனா பயன்
அமெரிக்காவின் வீழ்ச்சி இன்னொரு பக்கம் சீனாவின் எழுச்சிக்கு காரணமாகவும் கூட அமையலாம். உள்நாட்டு அரசியலில் குழப்பம் ஏற்பட்டால்.. அமெரிக்காவில் வெளிநாட்டு பிரச்சனைகளை கவனிக்க முடியாது. இப்போதே தென் சீன கடல் எல்லை பிரச்சனை மீது தேர்தல் காரணமாக அமெரிக்கா கவனம் செலுத்தவில்லை. அரசியல் குழப்பம் எல்லாம் ஏற்பட்டால் சீனாவின் ஆதிக்கம் இன்னும் அதிகம் ஆகும்.

ஆதிக்கமே
கொரோனா மூலம் ஏற்கனவே அமெரிக்கா பெரிய வீழ்ச்சியையே கண்டு, சீனா எழுச்சி பெற்றுள்ளது. தற்போது அமெரிக்க அரசியலிலும் குழப்பம் ஏற்பட்டால் அது சீனா தொடங்கி அமெரிக்காவை போட்டியாக பார்க்கும் ஈரான் உள்ளிட்ட நாடுகளை கூட எழுச்சி பெற வைக்கும். அப்படி ஒரு சூழ்நிலையை பிடனும், டிரம்பும் உருவாக்கி விட கூடாது.

ஏன் கூடாது
எந்த மாதிரியான தேர்தல் முடிவுகள் வந்தாலும் அதை இரண்டு பேருமே ஏற்றுக்கொண்டு விலகி செல்வதே அமெரிக்காவிற்கும் , சர்வதேச அரசியலுக்கும் நல்லது. 2016ல் அமெரிக்காவில் வலதுசாரி அரசியல் வலிமை அடைந்த போது.. உலகம் முழுக்க வலதுசாரி அரசியல் வலிமை பெற்றது. இந்தியாவில் வலதுசாரி அரசியல் விஸ்வரூப எடுக்க இந்த சர்வதேச போக்கும் காரணமாக இருந்தது.

வலிமை
அமெரிக்காவில் 2001.. செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதலின் போது.. உலகம் முழுக்க பாதுகாப்பு அச்சுறுத்தலும், பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்டது. அந்த அளவிற்கு அமெரிக்காவின் அரசியல் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி இருக்கும் போது.. அந்நாட்டு அதிபர் தேர்தலில் குழப்பங்கள் ஏற்பட்டால் அது இந்தியா உள்ளிட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகளை கூட நேரடியாக பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications