பல லட்சம் பணத்துடன் ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா சிக்கியது எப்படி? அரசு அதிரடி முடிவு
ஊட்டி: கணக்கில் வராத ரூ.11.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டு உள்ளார். நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பில் ஆணையாளர் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போதுதான் சிக்கினார்.
நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டி, வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்தே பெரிய மலைநகரமாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய மலை நகரம் என்றால் அது ஊட்டி தான். ஊட்டி என்பது தென்னிந்தியா முழுவதும் இருந்த வெள்ளைக்காரர்களுக்கு அந்த காலத்தில் சொர்க்க பூமியாக இருந்தது. மலைகளின் அரசியான ஊட்டியில் இஷ்டத்திற்கு வீடு மற்றும் கட்டிடங்கள கட்டிவிட முடியாது.. ஏன் நீலகிரி மாவட்டம் முழுவதுமே கட்டிடம் மற்றும் வீடுகள் கட்ட கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.

விதிகளை மீறி கட்டிடம் கட்டினால் இடித்து விடுவார்கள். இங்கு ஜேசிபி இயந்திரங்களை எளிதாக பயன்படுத்திவிட முடியாது. அதற்கு அனுமதி வாங்க வேண்டும். அந்த அளவிற்கு கட்டுப்பாடுகள் உள்ள பகுதியாகும்.. ஊட்டியை பொறுத்தவரை ஏராளமான சுற்றுலா விடுதிகள் உள்ளன. கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. சுற்றுலா நகரம் என்கிற போதிலும், தேயிலை நகரம் என்பதால் விவசாயம் சார்ந்த பணிகளும் அதிகமாக நடைபெறுகிறது. இந்நிலையில் விதிமீறலில் ஈடுபட்ட புகாரில் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி ஆணையாளராக கடந்த ஆகஸ்டு மாதம் ஜஹாங்கீர் பாஷா என்பவர் பொறுப்பேற்றார். இவர் கடந்த சில மாதங்களாக அனுமதி இல்லாத மற்றும் விதிமீறிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும் வாகனங்களை நிறுத்த தனியாருக்கு அனுமதி வழங்குவது உள்பட பல்வேறு செயல்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கி வந்ததாக புகார்கள் எழுந்தது.
இந்தநிலையில் கடந்த நவம்பர் 9-ந் தேதி பணியை முடித்துக் கொண்டு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு ஜஹாங்கீர் பாஷா சென்று கொண்டிருந்திருக்கிறார். அவர் செல்லும் வழியில் சில இடங்களில் பணம் வாங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது. இதுதொடர்பாக அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தினார். ஆனால் அவரால் கணக்கில் காட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் லஞ்ச பணம் என்பதை உறுதி செய்த நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜஹாங்கீர் பாஷா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி நகராட்சி துறைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பில் இருந்து ஜஹாங்கீர் பாஷாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டு உள்ளார். ஊட்டி நகராட்சி பொறியாளருக்கு, நகராட்சி ஆணையாளர் பணி கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டிக்கிறது.












Click it and Unblock the Notifications