‛‛நூலிழை ஓட்டு தான் வித்தியாசம்’’.. பாடலிபுத்திராவில் பாஜகவுக்கு புதுசிக்கல்? ‛இந்தியா’ கூட்டணி மாஸ்
பாட்னா: இந்தியாவில் லோக்சபா தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெற்று வரும் தொகுதியாக உள்ள பாடலிபுத்திரா பாஜகவின் கோட்டையாக இருக்கிறது. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக மீண்டும் வெல்லுமா? இல்லாவிட்டால் ‛இந்தியா' கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவாரா? என்பது பற்றிய பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பீகாரில் உள்ள முக்கியதான லோக்சபா தொகுதிகளில் ஒன்று பாடலிபுத்ரா. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள 2 தொகுதிகளில் ஒன்று தான் இந்த பாடலிபுத்ரா. கடந்த 2009க்கு முன்பு வரை பாட்னா என்ற பெயரில் இந்த தொகுதி அழைக்கப்பட்டது. 2009 லோக்சபா தேர்தலில் தொகுதி 2 ஆக பிரிக்கப்பட்டது. அப்போது பாட்னா என்ற தொகுதிக்கு பதில் பாட்னா சாஹிப் மற்றும் பாடலிபுத்ரா என 2 தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

இதில் நாம் இன்று பார்ப்பது பாடலிபுத்ரா தொகுதி. இங்கு தனபூர், மானேர், புல்வாரி, மாசாரி, பாலிகஞ்ச், பீக்ராம் உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியும், 2 இடங்களில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வென்றது. இங்கு ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லவில்லை.
அந்த வகையில் தற்போது பாடலிபுத்ரா லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட பாஜக எம்எல்ஏக்கள் இல்லை. அதோடு பாஜகவின் கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி, சிராக் பஸ்வானின் லோக்ஜன கட்சி (ராம்விலாஸ்) கட்சியை சேர்ந்தவர்களும் எம்எல்ஏக்களாக இல்லை. இதனால் கடந்த 2 தேர்தல்களில் தொடர்ந்து வென்ற இந்த தொகுதியை மீண்டும் பாஜக தக்க வைக்குமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இந்த தொகுதிக்கு கடைசி கட்டமான ஜுன் 1ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி உள்ளன. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்த தொகுதியில் பாஜக போட்டியிட உள்ளது. அதேபோல் எதிர்க்கட்சியாக உள்ள தேஜஸ்வின யாதவின் (லாலு பிரசாத் மகன்) ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் பாடலிபுத்திராவில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி களமிறங்க உள்ளது.
கடைசி கட்ட தேர்தல் என்பதால் இந்த தொகுதிக்கான வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாஜகவை பொறுத்தமட்டில் கடந்த 2 தேர்தல்களில் வென்று சிட்டிங் எம்பியாக உள்ள ராம் கிரிபால் யாதவ் மீண்டும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெறுமா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
அதாவது கடந்த 3 லோக்சபா தேர்தல்களில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் என்பது மிகவும் அதிகபட்சமாக 40 ஓட்டுகளாக தான் இருந்துள்ளது. தற்போது 6 சட்டசபை தொகுதிகளில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் இல்லாதது அந்த கட்சிக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இணைந்தது பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இந்த தொகுதியை பற்றி அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ‛‛தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி சரியான வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் எளிதாக வெல்லலாம்'' என்கின்றனர். மேலும் அவர்கள் கடந்த 3 லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை சுட்டிக்காட்டி இந்த கருத்தை தெரிவிக்கின்றனர். அதாவது கடந்த 3 தேர்தல்களில் பாடலிபுத்திரா லோக்சபா தொகுதியில் வெற்றி வாக்கு சதவீதம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
அதன்படி பார்த்தால் கடந்த 2019 தேர்தலில் பாஜகவின் ராம் கிரிபால் யாதவ் 5 லட்சத்து 9 ஆயிரத்து 557 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கி ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் வேட்பாளர் மிசா பாரதி 4 லட்சத்து 70 ஆயிரத்து 236 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் என்பது வெறும் 39,321 தான்.
அதேபோல் கடந்த 2014 தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம் கிரிபால் யாதவ் தான் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் கிரிபால் யாதவ் 3 லட்சத்து 83 ஆயிரத்து 262 ஓட்டுகள் பெற்றார். ஆர்ஜேடி வேட்பாளர் மிசா பாரதி 3 லட்சத்து 42 ஆயிரத்த 940 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். ஓட்டு வித்தியாசம் என்பது 40,322 தான்.
அதற்கு முன்பு 2009 தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ரஞ்சன் பிரசாத் யாதவ் வெற்றி பெற்றார். அவர் 2 லட்சத்து 69 ஆயிரத்து 298 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 2 லட்சத்து 45 ஆயிரத்து 757 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில் வாக்கு வித்தியாசம் என்பது 23,541 என்று தான் இருந்தது. இதனால் சரியான வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசார யுக்தியை ‛இந்தியா' கூட்டணி முன்னெடுத்தால் நிச்சயம் பாஜகவை வீழ்த்த முடியும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications