ஊரடங்கு.. வியாபாரிகள் வரலை.. தோட்டத்து தர்பூசணியை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தோட்டத்தில் விளைந்த தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் வராததால், ஊர் மக்களுக்கு தர்பூசணி பழத்தை விவசாயி ஒருவர் இலவசமாக வழங்கி வருகிறார்.
புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கோடைக்காலத்துக்கான பயிர்களான தர்பூசணி, கிர்ணி, வெள்ளரி பழங்கள் பயிரிட்டு வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். புதுச்சேரியிலும் பல இடங்களில் இப்பழங்கள் விற்பனையாகும்.
இதனிடையே கொரோனா ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வியாபாரிகள் வரமுடியவில்லை. இதனால் தோட்டங்களில் விளைந்த பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

செந்தில்குமார் விவசாயி
இந்நிலையில் புதுச்சேரி அடுத்த சந்தைபுதுக்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் தனது தோட்டத்தில் விலைந்த தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் வராததால், அவற்றை தாமே அறுவடை செய்து ஊரில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இதுகுறித்து விவசாயி செந்தில்குமார் கூறுகையில், தர்பூசணி பழத்தை 5 ஏக்கரில் கடந்த 2 ஆண்டுகளாக பயிரிட்டு வருகிறேன். இம்முறை ரூ.2.50 லட்சம் செலவிட்டேன்.

தர்பூசணி விளைச்சல்
தற்போது நன்றாக தர்பூசணி விளைச்சல் இருந்தது. தர்பூசணியை சென்னை, பெங்களூர், கேரளா போன்ற இடங்களில் இருந்து வியபாரிகள் வந்து வாங்கி செல்வர். ஆனால் இம்முறை அறுவடை செய்யும் நேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் எழுந்தது. ஊரடங்கும் அமலானதால், வெளியூரிலிருந்து யாரும் வாங்க வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பழங்கள் தோட்டத்திலேயே அழுகி வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

நஷ்டம்தான்
கடந்த ஆண்டு ஒரு டன் தர்பூசணி ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையானது. இப்போது ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. இருந்தாலும் அந்த விலைகொடுத்து வாங்கக்கூட வியாபாரிகள் வருவதில்லை. எனவே நான் நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை. அவற்றை அறுவடை செய்து எனது கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் கவலை
செந்தில்குமார் மட்டுமல்ல பெரும்பாலான விவசாயிகளுக்கும் இதே நிலைதான். உற்பத்திசெய்தும் அதை உரிய விலைக்கு விற்கமுடியவில்லை அல்லது வியாபாரிகள் வாங்க வருவதில்லை. இந்த இரண்டு விதமான சிக்கல்களில் அவர்கள் உள்ளனர். இதை விட கொடுமை இவர்களிடம் சொற்ப விலைக்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் பலரும், பெரிய விலைக்கு வெளியில் விற்று அதில் அவர்கள் லாபம் பார்ப்பதே.. கடைசியில் பாதிப்பு என்னவோ அப்பாவி விவசாயிகளுக்குத்தான்.












Click it and Unblock the Notifications