"புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவோம்" லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய சார்லஸ் மார்ட்டின்!
புதுச்சேரி: புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கியுள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிய அவர், புதுச்சேரியை நம்பர் 1 சிட்டியாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு JCM மக்கள் மன்றம் மூலம் தீர்வு கண்ட ஜோஸ் சார்லஸ் மார்டின், தற்போது தனது தலைமையில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கியுள்ளார். இன்று காலை மணக்குள விநாயகர் ஆலயம், தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், ஹம்ரத் சையத் அஹமத் மௌலா சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஆகியவற்றில் வழிபட்டார் .

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி துறைமுகம் வந்து, அங்கிருந்து படகு மூலம் கடலுக்குள் சென்று லட்சிய ஜனநாயக கட்சியின் கொடியை கடலில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார். நீலம், வெள்ளை, சிவப்பு நிறக் கொடியில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சித்திரங்கள் மற்றும் நெற்கதிருடன் எல்ஜேகே என பொறிக்கப்பட்ட கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து 64 படகுகள் எல்ஜேகே வடிவத்தில் பிரம்மாண்டமாக அணிவகுத்து நின்றன. இந்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது. பின், புதுச்சேரி மெரினா கடற்கரையில் நடைபெறும் தொடக்க விழாவில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கொள்கைகளை அறிமுகம் செய்கிறார். அதேபோல் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மத நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் வகையில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களிடம் ஒரு சேர ஆசி பெற்றார்.
தொடர்ந்து லட்சிய ஜனநாயக கட்சியைத் தொடங்கிய தனது கணவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு அவரது மனைவி சிந்துஶ்ரீ சார்லஸ் மற்றும் மகள் த்ரேலக்ஷா சார்லஸ் வாழ்த்து தெரிவித்தனர். இதன்பின் இவர்களுடன் இணைந்து சார்லஸ் மார்டின் நாட்டுப்பண் பாடினார். இதன்பின்னர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேசுகையில், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.

மனிதர்களை காக்ககூடிய மருந்தில் கூடிய ஊழல் செய்கிறார்கள். 3 வயது குழந்தை பலியாகும் அவலம் உள்ளது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி சிண்டிகேட் போட்டு வேலை செய்கிறார்கள். லோக்கல் அரசியல் செய்ய வரவில்லை. புதுச்சேரியை நம்பர் 1 சிட்டியாக மாற்ற வேண்டும். புதுச்சேரியில் கல்லூரி மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு விளையாட்டுத் துறையில் முக்கியத்துவம் அளிப்பதில்லை. விளையாட்டுத்துறையில் தனியாரின் தலையீடு அதிகமாக உள்ளது. புதுச்சேரி அரசு மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது. மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும். எனது பாட்டி, தாத்தா இருவரும் பத்து ரூபாய்க்காக கூலி வேலை செய்தவர்கள்.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் இன்று இறைவன் அருளால் நல்ல நிலையில் இருக்கிறோம். என்னுடைய அப்பாவின் உழைப்பாலும், அம்மாவின் துணையாலும் இன்று இந்த நிலையில் உள்ளோம். சிறுவயதில் அப்பா தான் என்னை பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். புதுச்சேரிக்கு குதிரை ஓட்ட வரவில்லை. மக்களுக்கு நல்ல பாதை காட்ட வந்து இருக்கிறோம்.

டென்மார்க், பூடான், அயர்லாந்து போன்று புதுச்சேரியை மாற்ற வேண்டும். புதுச்சேரியில் நல்லதொரு ஆட்சி அமைய வேண்டும். மக்களின் அன்பு மட்டும் எனக்கு போதும். வரும் தேர்தலில் நாம் ஜெயித்து புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக மட்டும் 300 பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications