புதுச்சேரியில் ஊரடங்கை மீறி கறி விருந்து... அமைச்சரின் உதவியாளர் மீது வழக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கை மீறி கும்பலாக கறிவிருந்தில் பங்கேற்றதாக அமைச்சரின் உதவியாளர் உள்பட 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. புதுச்சேரியிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் படி மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் ஒன்றுகூடி சமைத்து கறி விருந்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல புதுச்சேரியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சரின் உதவியாளர் கிருஷ்ணராஜ், வில்லியனூர் காவல்நிலையத்துக்குட்பட்ட மணவெளி பகுதியில் உள்ள ஒரு தோப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் கறி விருந்தில் பங்கேற்றுள்ளார். அப்போது அதை அவர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த வில்லியனூர் காவல்நிலைய போலீஸார், கறி விருந்தில் பங்கேற்ற மணவெளியைச் சேர்ந்த அமைச்சரின் உதவியாளர் கிருஷ்ணராஜ், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 12 பேர் மீது, ஊரடங்கை மீறியது, நோய் பரப்பும் வகையில் ஒன்றாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, தலைமறைவான அவர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications