புதுச்சேரியில் பரபர ரெய்டு.. ஒரே நேரத்தில் 31 மணல் கொள்ளையர்கள் கைது.. 23 மாட்டு வண்டிகள் பறிமுதல்
புதுச்சேரி: புதுவை சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட 23 மாட்டு வண்டிகள் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் சங்கராபரணி ஆறு மற்றும் தென்பென்னை ஆறுகளில் மணல் எடுப்பதற்கு தடை அமலில் உள்ள நிலையில், தடையை மீறி அதிகாலை நேரத்தில் மர்ம கும்பல்கள் ஆற்றுப் பகுகளில் மணல்களை திருடி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அவ்வப்போது போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மணல் திருட்டு ஓய்ந்தாபாடில்லை.

இந்நிலையில் மணல் திருட்டு புகார் தொடர்பாக இன்று அதிகாலை வில்லியனூர் போலீசார் 50 க்கும் மேற்பட்டோர் மாஸ்டர் பிளான்போட்டு திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு திருட்டு மணல் எடுத்து கொண்டிருந்த வில்லியனூர், ஆரியபாளையம், திருக்காஞ்சி, மங்கலம் பகுதியை சேர்ந்த 31 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் திருட்டு மணல் எடுக்க பயன்படுத்தப்பட்ட 23 மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் மற்றும் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் கைது செய்யப்படுவது இதே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications