தமிழகத்தில் எதிர்ப்பு பிரச்சாரமே அதிகம்.. புதுச்சேரியில் தமிழிசை திடீர் தாக்கு!
புதுச்சேரி: தமிழகத்தில் தவறான தகவல் தொடர்பு காரணமாக வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு உருவாக்குதல் அவசியம் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா - தென்கிழக்கு ஆசிய நாடுகளுகளுக்கு இடையிலான கடல் சார்ந்த பழைய சகோதரத்துவத்தை நினைவூட்டும் சர்வதேச கருத்தரங்கு புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புதுவை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கலாச்சாரம், வர்த்தக தொடர்புகள் பழங்காலம் தொட்டே இருந்தது வந்தது. ஆனால் வரலாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

மீட்டு உருவாக்கம் செய்தல் அவசியம். தமிழகத்திலும் தவறான தகவல் தொடர்பு காரணமாக வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாறு நிறைய மறைக்கப்பட்டுள்ளது. கடல் கடந்த தமிழர் பெருமை சான்றாக மகாராஷ்டிரா துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயருடன் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலோ எதிர்ப்பு பிரச்சாரமே அதிகம். மறைக்கப்பட்ட இந்திய வரலாறை மீட்டு உருவாக்கம் செய்தல் அவசியம் என்று குறிப்பிட்டார்.

தமிழிசையை தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரிக்கு ரோமானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என பல நாட்டவர்கள் வந்துள்ளனர். நெருங்கியத்தொடர்பு இருந்துள்ளது. பழங்காலத்தில் புதுச்சேரியில் இருந்த சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை மீட்டு உருவாக்க வேண்டும். கடல் வாணிப சான்றாக உள்ள அரிக்கன்மேட்டில் மியூசியம் அமைக்கப்படுகிறது. அத்துடன் கோயில் சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் தருகிறோம் என குறிப்பிட்டார்.













Click it and Unblock the Notifications