ஒமிக்ரான்: புதுச்சேரியில் யாருக்கும் புதுவகை வைரஸ் அறிகுறி இல்லை.. பீதி வேண்டாம்.. தமிழிசை நம்பிக்கை
புதுச்சேரியில் ஒமிக்ரான் தொற்று யாருக்கும் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்
புதுச்சேரி: 2 டோஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட ஆவணங்கள் உள்ள வெளி மாநிலத்தவர்கள் மட்டுமே, புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் தொற்றை ஒழிக்கும் முயற்சி நடந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,224 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா டெஸ்ட்டில், புதுச்சேரியில் 11 நபர்களுக்கும், காரைக்காலில் 7 நபர்களுக்கும், மாஹேவில் 3 நபர்களுக்கும் என மொத்தம் 21 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்...
இப்போதைக்கு 312 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,26,697 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. அதேபோல, தடுப்பூசி முதல் தவணை 7,53,602 பேரும், இரண்டாம் தவணை 4,62,792 பேரும் செலுத்தியுள்ளனர்... மொத்தமாக 12,16,394 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தொற்று
இந்த சூழலில்தான், ஓமிக்ரோன் என்ற கொடிய கொரோனா வைரஸ் பரவல் பற்றிய செய்தி வெளியாகி வருகிறது.. இதனால் உலக நாடுகள் பீதியில் உள்ளன.. அந்த வகையில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசும் தெரிவித்துள்ளது.. இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனாவைரஸ் பரவல் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் விரிவாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி
புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தி கொள்வதை தீவிரப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றனர். அதன்படி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜா நகரில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக கூறினார்.

பேட்டி
அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாட்டில் புதிய வகையான வைரஸ் பரவி கொண்டு வருகிறது.. ஆப்பிரிக்காவிலிருந்து புதுச்சேரிக்கு வந்த 3 பேர் சந்தேகத்திற்கிடமான கொரோனா டெஸ்ட் நடத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.. அவர்களுக்கு தொற்று இல்லை. எனினும் பரவி வரும் வைரஸ் தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்துள்ளேன். இதுவரை அது போன்ற ஒரு அறிகுறி புதுச்சேரியில் யாருக்கும் இல்லை.

எச்சரிக்கை
எந்த வகை வைரஸ் பரவினாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி தடுப்பூசி செலுத்தி கொள்வதுதான். அதனால் விடுபட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கையாக புதுவை மாநில எல்லைப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. அனைத்து மார்க்க எல்லைப்பகுதிகளிலும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரை சுகாதார குழுவினர் பரிசோதித்து கண்காணிக்கப்பட உள்ளனர்.
Recommended Video

அனுமதி
நோய் பரவாமல் இருக்க வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆவணங்களை காட்டினால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.. இதனை தீவிரமாக பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.. எனவே பொதுமக்கள் விரைந்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications