ரூட்டை மாற்றிய அமைச்சர் ரகுபதி..பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பு.. பின்னணியில் ராமர் ‛மேட்டர்’
புதுக்கோட்டை: திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சி தான். ஈவெரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலினுக்கு முன்னோடியாக ராமரை நாங்கள் பார்க்கிறோம் என புதுக்கோட்டையில் நடந்த கம்பன் கழக விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியது சர்ச்சையானது. இதுபற்றி நேற்று பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் அமைச்சர் ரகுபதி ரூட்டை மாற்றி பதிலளிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் ரகுபதி. திமுகவின் மூத்த தலைவராக ரகுபதி உள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. அதாவது ராமர் தொடர்பாக கூறப்படும் தகவல்களை திமுக நம்பியது இல்லை. மாறாக ராமரை திமுக தலைவர்கள் விமர்சனம் செய்தது உண்டு.

ஆனால் அமைச்சர் ரகுபதி, ராமரின் ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கே முன்னோடி. ஈவெரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலினுக்கு முன்னோடியாக ராமரை நாங்கள் பார்க்கிறோம் என கூறி பரபரப்பை கிளப்பினார். இதுதான் சர்ச்சையாக காரணம்.
அதாவது புதுக்கோட்டையில் கம்பன் கழக விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும்; இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் உருவாக்கப்பட்ட காவியம்தான் ராமகாவியம்- கம்பராமாயணம் என்பதை நாம் இங்கே மனதில் வைத்துக் கொண்டாக வேண்டும். அதில் உள்ள பல நல்ல கருத்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். போற்றப்பட வேண்டும். எனவே வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கின்ற போதுதான், இது எங்களுடைய திராவிட மாடலுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கின்ற காரணத்தால்தான் ராமனை இன்றைய திராவிட மாடல் ஆட்சியினுடைய முன்னோடியாக நாங்கள் கருதுகிறோம்.
தந்தை பெரியாருக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவுக்கு முன்னால், டாக்டர் அம்பேத்கருக்கு முன்னால், தலைவர் கலைஞருக்கு (கருணாநிதி) முன்னால் இன்று நம்முடைய நம் தளபதிக்கு (முதல்வர் மு.க.ஸ்டாலின்) முன்னால் இந்த திராவிட மாடல் ஆட்சி முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கக் கூடிய சமூக நீதியை, சமத்துவ சமூக நீதி இவற்றையெல்லாம் போதித்தவர். எல்லோரும் சமம் என்று சொன்னவர் ஒரே நாயகன் ராமர். இதை யாரும் மறுக்க முடியாது. இதை மறுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சி'' என்று பேசி பரபரப்பை பற்ற வைத்தார்.
அமைச்சர் ரகுபதி இப்படி பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியானதை தொடர்ந்து விமர்சனங்கள் கிளம்பின. ராமர் தொடர்பாக கூறப்படும் செய்திகளை திமுக ஏற்காத நிலையில் ராமர் தான் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கே முன்னோடி என்று கூறியதை நினைத்து திமுகவினர் புலம்ப தொடங்கினர். மாறாக பாஜக தலைவர்கள் இந்த வீடியோவை தங்களின் வலைதளங்களில் பதிவிட்டு கடைசியாக அமைச்சர் ரகுபதி உண்மையை சொல்லி விட்டார் என்று தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‛‛ராமர் ஆட்சி பற்றி புரிந்து கொள்வதற்கு திமுகவுக்கு இவ்வளவு காலம் ஆகி உள்ளது. இவ்வளவு காலமாக ராமராஜ்யம் குறித்து, திமுகவினர் கூறிய கருத்துகளுக்கு, சட்டத்துறை அமைச்சர் ராமராஜ்யம் குறித்து விளக்கம் அளித்து, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்'' என்றார். இதனால் கடந்த 2 நாட்களாக இந்த விவகாரம் வலைதளங்களில் விவாதமானது.
இத்தகைய சூழலில் தான் அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று வந்தார். நிகழ்ச்சியை முடித்த பிறகு அமைச்சர் ரகுபதியிடம் பேட்டி காண பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். அப்போது பத்திரிகையாளர்களை சந்திக்க விரும்பாத ரகுபதி விலகி செல்ல முயன்றார். ஆனால் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர்.
அப்போது அவர், இப்போது பேட்டியளித்தால் நன்றாக இருக்காது என்றார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், 'நீங்கள், ராமர் ஆட்சியின் நீட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என கூறிய கருத்து சர்ச்சையாகி இருக்கிறதே என கேட்டார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், ''அதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை'' எனக்கூறிவிட்டு பத்திரிகையாளர்கள் நிற்கும் இடத்தை விட்டு மாற்று திசையில் திரும்பி நழுவி சென்றார். இந்த வீடியோவும் தற்போது வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications